11/10/2018

தூர்ஸ் நகர் ஆயர் மார்ட்டின் Martin von Tours
மார்ட்டின் தந்தை இத்தாலி நாட்டை சார்ந்தவர். எனவே தன் தந்தை பிறந்த நாட்டில் கிறிஸ்தவ பக்தியோடு வளர்க்கப்பட்டார். மார்ட்டின் தனது 10 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்றார். அன்றிலிருந்து தான் ஓர் துறவியாக வேண்டுமென்
று ஆசைக்கொண்டார். ஆனால் இவரின் ஆசை நிறைவேற தாமதம் ஆனது. இவரின் தந்தை மார்ட்டின் படைவீரர்களின் தலைவனாக்க விரும்பினார். இதனால் இவரின் 15 ஆம் வயதிலேயே காலிஷன்(Gallischen) என்ற பெயர் கொண்ட படையில் சேர்க்கப்பட்டார். இதனை விரும்பாமல் மார்ட்டின் வேதனை அடைந்தாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றார். போரில் பங்கெடுப்பதற்கான தைரியத்தை வளர்த்துக்கொண்டார். 

ஒருமுறை மார்ட்டின் மிக குளிரில் போரிட நேரிட்டது. குளிரை தாங்க முடியாமல் தவித்தார். அவ்வேளையில் இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார். இவரின் மன்றாட்டை கேட்டு பதிலளிக்கும் விதத்தில் இவருக்கு குளிர்தாங்கும் ஆடைகளை பரிசாக தந்தார். இவ்வற்புதத்தை பெற்ற மார்ட்டின் படைவீரர்களின் மத்தியில் மறைப்பணியை ஆற்றினார். பிறகு தான் பிறந்த ஊருக்கு திரும்பி சென்று மறைப்பரப்பு பணியில் ஈடுபட்டார். குருப்பட்டம் பெற்றபின் ஆலயங்கலையும் துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். 371 அல்லது 372 ஆம் ஆண்டு தூர்ஸ் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பை ஏற்றபின், பல துறவற சபைகளை தன் மறைமாவட்டத்திற்கு வரவழைத்தான். துறவிகள் தங்குவதற்கென துறவற மடங்கலை கட்டி எழுப்பினார். ஆனால் ஆயர் மார்ட்டின் மிக ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தார். தனது 30 வருட ஆயர் பதவியில் பல இன்னல்கள் அடைந்து நற்செய்தியை பறைசாற்றினார். அதன்பிறகு மறைப்பணியாளராகப் பணியாற்ற பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடத்தில் அன்பு காட்டி சிறந்ததோர் நண்பராக செயல்பட்டார். குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஆன்ம வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 

இவர் துறவறமடம் ஒன்றையும் நிறுவியுள்ளார். இவர் எல்லா மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார். பல மறைப்பணியாளர்களைப் பேணி பயிற்றுவித்தார். 
செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, ஆயரான புனித மார்ட்டினுடைய வாழ்வினாலும், இறப்பினாலும் மாட்சி அடைந்தீரே. எங்கள் உள்ளங்களிலும் உமது அருளின் வியத்தகு செயல்களை புதுப்பித்து நாங்கள் வாழ்விலும் இறப்பினும் உமது இறை அன்பிலிருந்து பிரிந்திருக்க விடாதேயும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

தனது சாதுரியமான பேச்சால் இத்தாலியைக் காப்பாற்றியவர் (St. Leo the Great)
அக்காலத்தில் ஐரோப்பாவில் ஹூன் இனப் பேரரசு, ஜெர்மனியின் ரைன், டான்யூப் ஆற்றுப் பகுதிகளை உள்ளடக்கி, பால்டிக் கடல் வரை பரவியிருந்தது. ஹூன் பேரரசின் படைத்தலைவரான அத்தில்லா என்பவர், உர
ோமைப் பேரரசர் மூன்றாம் வலென்டீனியனின் சகோதரியான ஹொனோரியா என்பவரை மணந்துகொள்ள விரும்பினார். எனவே மணப்பெண்ணை மிகுந்த செல்வங்களோடு தன்னிடம் அனுப்பித்தர வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் உரோமைப் பேரரசின்மீது போர்தொடுக்கப் போவதாகவும் மிரட்டினார் அத்தில்லா. ஆனால் வலென்டீனியன் தன் சகோதரியை அனுப்ப மறுத்துவிட்டார். அதேநேரம் கி.பி.452ம் ஆண்டில் அத்தில்லா வட இத்தாலியின்மீது படையெடுத்து Aquileia போன்ற பல நகரங்களைச் சூறையாடி உரோமை நோக்கி வந்து கொண்டிருந்தார். எனவே அத்தில்லாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, திருத்தந்தை லியோ அவர்கள் தலைமையில் மூன்றுபேர் கொண்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பினார் உரோமைப் பேரரசர் வலென்டீனியன். திருத்தந்தை லியோ அவர்கள், அத்தில்லாவை மாந்துவா நகரில் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். அத்தில்லாவும் அவருடைய படைகளும் படையெடுப்பைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. மேலும், திருத்தந்தை லியோ அவர்கள், அத்தில்லாவின் முன்நின்று பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில், பிரமாண்டமான ஒரு மனிதர், குருவுக்கு உரிய உடையை அணிந்துகொண்டு, கையில் ஒரு வாளை ஏந்தியவராய் தன்னையும் தனது படையையும் மிரட்டியது போன்ற ஒரு காட்சியை அத்தில்லா மட்டும் பார்த்ததாகவும், அதனால் பயந்துபோன அத்தில்லா பணிந்தார் எனவும் ஒரு வரலாற்றாசிரியர் எழுதி வைத்துள்ளார். புனித திருத்தந்தை முதலாம் லியோ அவர்கள், திருஅவை வரலாற்றில் "பெரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார். இத்தாலியன் டஸ்கன் மாநிலத்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர், கி.பி.440ம் ஆண்டுமுதல் 461ம் ஆண்டு அவரின் இறப்புவரை திருஅவையை வழிநடத்தினார். கால்செதோன் நான்காம் பொதுச் சங்கத்தில், கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள் குறித்த கிறிஸ்தியல் விவாதத்தில் இவரின் பங்கு பெரிதும் பாராட்டப்படுகிறது. திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்கள் விழா நவம்பர் 10
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இறையியலாளர் & துறவி யோஹான்னஸ் துன்ஸ் ஸ்கோட்டஸ் Johannes Duns Scotus 
இவர் ஓர் புகழ்வாய்ந்த இறையியலாளர். இவர் தான் பிறந்த ஊரிலேயே கல்லூரிவரைப் படித்தார். தன்னுடைய இளமைப்பருவத்திலிருந்தே பிரான்சிஸ்கன் சபை குருக்களிடம் உறவு கொண்டிருந்தார். அவர்களின்மேல் க
ொண்ட அன்பால், தான் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இதனால் இறையியல் படிப்பை பாரிஸில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியில் கற்றார். பின்னர் அங்கிருந்து கொலோன் வந்தடைந்தார். அங்கு துறவற சபைத்தலைவர் ஒருவருக்கு உதவி செய்து அச்சபையை வளர்த்தெடுத்தார். பின்னர் அங்கிருந்து ரைன் (Rhein) என்ற நகருக்கு சென்று அங்கு பணியாற்றினார். இவர் தனது 43 ஆம் வயதில் இறந்தார்.
செபம்:
கலைகளை கற்றுத் தருபவரே எம் தலைவா! இன்றைய உலகில் வாழும் இறையியல் அறிஞர்கலை ஆசீர்வதியும். அறிவையும் ஞானத்தையும் தந்து, சிறந்த இறையியலாளர்களை உருவாக்கிட வரம் தர வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

லிமோகெஸ் நகர் துறவி லியோனார்ட் Leonhard von Limoges 
பாதுகாவல்: விவசாயிகள், வீட்டு விலங்குகள், குதிரைகள், சிறைக்காப்பாளர்கள், பழ வியாபாரிகள், மலைவாழ் மக்கள் 


இவரின் வரலாற்றைப் படிக்கும்போது, இவர் ஓர் உயர்தர குடும்பத்தைச் சார்ந்தவர் என்று அறியப்படுகின்றது. இவர் ஆயர் ரெமிஜியுஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தான் குழந்தையாக இருக்கும் போதும், இளமைப்பருவத்திலிருக்கும்போதும், தன்னை துறவி என்று கூறி வந்துள்ளார். இவர் தனிமையாக காட்டில் வாழ்ந்துள்ளார். காட்டை சுற்றி வாழ்ந்த மக்களால் இவர் புனிதர் என்று போற்றப்பட்டுள்ளார். 

இவர் அரசாங்கத்தால் சிறைபிடித்து செல்லப்பட்ட மக்களிடத்தில் தனி அன்பு கொண்டு வாழ்ந்துள்ளார். சிறைவாழ் மக்கள் இவரை "தங்களின் அரசர்" என்று கூறியுள்ளனர். இவர் காட்டில் தன்னுடைய சிறிய குகையில் வாழ்ந்துக்கொண்டே துறவற மடம் ஒன்றையும் கட்டியுள்ளார். இவரின் புனிதமான வாழ்வைக் கண்ட சிலரும், இவரை பின்பற்றியுள்ளனர். இவர் தன்னை பின்பற்றிய மக்களுக்கென்று சபை ஒன்றை நிறுவி, அச்சபையின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையானது, இன்று திருயாத்திரை தலமாக காட்சியளிக்கின்றது. 
செபம்:
படைப்பின் பரம்பொருளே! இன்று காட்டில் வாழும் மக்கள் அனைவரையும் உம் கரத்தில் அர்ப்பணிக்கின்றோம். உமது இயற்கையை நேசித்து, அன்பு செய்து இயற்கையின் வழியாக உம்மைக் காணும் அம்மக்களை எல்லாவித ஆபத்துக்கள் இயற்கையின் சீற்றங்கள் அனைத்திலிருந்தும் காத்து, நல்வாழ்வை வாழ வரம் தந்து காத்திட வேண்டுமென்று மூவொரு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இறையழைத்தலுக்கு அரண்மனை சுகம் ஒரு தடையல்ல (St. Charles Borromeo) 
வட இத்தாலியில் பிரபுக்கள் பரம்பரையில் 1538ம் ஆண்டு பிறந்தவர் சார்லஸ் பொரோமேயோ. இத்தாலியிலுள்ள Lago Maggiore என்ற பெரிய ஏரியில் ஒருமுறை பயணம் செய்தாலே, இவரது குடும்பத்தின் செல்வவளத்தை அறி
ந்து கொள்ளலாம். சார்லஸ் பொரோமேயோ அவர்கள், குடியுரிமைச்சட்டம் மற்றும் திருஅவைச் சட்டம் பயின்றவர். இவரது தாய்மாமாவாகிய கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோ மெதிச்சி அவர்கள், 1559ம் ஆண்டில்(டிச.25) திருத்தந்தை நான்காம் பத்திநாதராக, பணியைத் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே சார்லசை உரோமைக்கு அழைத்து கர்தினாலாக உயர்த்தி திருப்பீடச் செயலராக்கினார் அவர். அதோடு மிலான் உயர்மறைமாவட்ட நிர்வாகியாகவும் ஆக்கினார். இதற்கிடையே, 1562ம் ஆண்டு (நவம்பர் 19) சார்லசின் மூத்த சகோதரர் பெதரிக்கோ திடீரென இறந்தார். பெதரிக்கோவுக்குக் குழந்தைகளும் இல்லை. இதனால் சார்லசின் குடும்பமும், திருத்தந்தையும் இவரை திருஅவைப் பணிகளைக் கைவிட்டு திருமணம் செய்து குடும்பச் சொத்தை நிர்வகிக்குமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால், தான் குருவாக விரும்புவதாக உறுதியாகச் சொல்லிவிட்டார் சார்லஸ். பின்னர் குருத்துவப் பயிற்சியை முடித்து குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 1563ல் மிலான் பேராயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், குருக்களின் தூய வாழ்வில் முதலில் கவனம் செலுத்தினார். நன்னெறி வாழ்வில் முறைதவறி நடந்த குருக்கள் மற்றும் பொதுநிலையினரின் வாழ்வைச் சரிப்படுத்தினார். வீட்டில் இருந்தபடியே மூன்றாம் சபைபோல் எளிய வாழ்வு வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சொத்து சேர்ப்பதில் தீவிரமாக இருந்த குருக்களை நெறிப்படுத்தினார். இதனால் எதிரிகளால் சுடப்பட்டார், ஆயினும் உயிர் பிழைத்தார் பேராயர் சார்லஸ். மிலானில் தொற்றுநோய் பரவியபோது, காலில் ஆணிகுத்தி இரத்தம் வடிந்ததையும் பொருட்படுத்தாது சிலுவையைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் நடந்தார். அச்சமயங்களில் தினமும் ஏறக்குறைய எழுபதாயிரம் மக்களுக்கு உணவளித்தார். ஆலயங்களில் பக்தி மிகுந்த பாடல்களை அறிமுப்படுத்தினார். ஆலயங்களில் தேவையற்ற நடைமுறைகளை ஒழித்தார். பேராயர் சார்லஸ் செய்த சீர்திருத்தப் பணிகளுக்கென திருத்தந்தை உட்பட பலரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தார். பலமுறை கூட்டப்பட்டும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட திரிதெந்து பொதுச்சங்கத்தைக் கூட்டி பல முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்குக் காரணமானவர்களில் இவரும் ஒருவர். பேராயர் சார்லஸ் பொரோமேயோ அவர்கள், 1584ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தனது 46வது வயதில் காலமானார். கத்தோலிக்கத் திருஅவையில் குழப்பம் நிறைந்திருந்த 16ம் நூற்றாண்டில் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த லொயோலா இஞ்ஞாசியார், பிலிப் நேரி உட்பட்ட புனிதர்களில் புனித சார்லஸ் பொரோமேயோ அவர்களும் ஒருவர். இவர் கற்றலுக்கும் கலைகளுக்கும் பாதுகாவலராக நோக்கப்படுகிறார். இவரின் விழா நவம்பர் 04.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புகழுக்கு அஞ்சி அடிக்கடி இடத்தை மாற்றியவர்(St. Hilarion) 
ஹிலாரியோன் என்ற பாலஸ்தீனச் சிறுவனின் பெற்றோர் தங்களின் மகனைக் கல்வியில் சிறந்தவனாக்க விரும்பி, அக்காலத்தில் கல்விக்குச் சிறந்து விளங்கிய எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவுக்கு அவனை அனுப்பினர். 
அங்குச் சென்ற ஹிலாரியோனுக்கு அந்நகரின் திரையரங்குகளும், கேளிக்கை விளையாட்டுகளும், ஆடம்பரமான நண்பர்களும் கவர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அந்நகரின் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறை அச்சிறுவனை ஈர்த்தது. அச்சமயத்தில் எகிப்தியப் பாலைநிலத்தில் கடும் தவ வாழ்க்கை வாழ்ந்த தூய அந்தோணியார் பற்றி எல்லாரும் வியந்து பேசுவதைக் கேட்டார் இச்சிறுவன். எனவே அவருடன் வாழ முடிவெடுத்து பாலைநிலம் சென்றார் ஹிலாரியோன். அப்போது ஹிலாரியோனுக்கு வயது பதினைந்து. அந்தோணியாரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்ததால், அவருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த பின்னர் தனது சொந்த ஊரான Thabathaவுக்குத் திரும்பினார் ஹிலாரியோன். இவரிடம் ஒரேயொரு மயிராடையும், அந்தோணியார் கொடுத்த தோலாலான ஒரு மேலங்கியுமே இருந்தன. ஊரில் பெற்றோர் இறந்திருந்ததைக் கண்டு தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, காசாவுக்கு அருகிலுள்ள Majuma பாலைவனம் சென்றார் இவர். ஒரு பக்கம் கடலையும், மறுபக்கம் சதுப்பு நிலத்தையும் கொண்ட அவ்விடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் நிறைந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் அவரை எச்சரித்தனர். ஆயினும் அங்கு குச்சிகளால் ஒரு சிறு குடிசை அமைத்து அந்தோணியார்போல் கடும் தவ வாழ்வு வாழத் தொடங்கினார் ஹிலாரியோன். தினமும் கதிரவன் மறைந்த பின்னர் 15 காய்ந்த அத்திப்பழங்களை மட்டுமே சாப்பிட்டார். சாத்தானின் பிடியிலிருந்து பலரை விடுவித்தார். மேலும் பல புதுமைகளையும் செய்தார். மக்களும் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை நாடி மீண்டும் எகிப்து சென்றார்(கி.பி. 360). அங்கு அந்தோணியார் வாழ்ந்த இடங்களைத் தரிசித்தார். பின்னர் அலெக்சாந்திரியாவுக்கு அருகிலுள்ள Bruchium சென்றார். ஆனால் ஜூலியன் என்பவர், கிறிஸ்தவத்துக்கு எதிராகக் கிளம்பி இவரைக் கைது செய்ய முயற்சித்தான். இதனால் லிபியப் பாலைநிலம் சென்றார். பின்னர் சிசிலி சென்று, Pachinumக்கு அருகில் நீண்ட காலம் கடும் தவ வாழ்வு வாழ்ந்தார். இதற்கிடையே, இவரின் முந்தைய சீடரான Hesychius, இவரைத் தேடி அங்கு வந்தார். துறவி ஹிலாரியோன் அவர்களைத் தேடி மீண்டும் மக்கள் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை நாடி குரோவேஷியா நாட்டின் Dalmatiaவிலுள்ள Epidaurus சென்றார். இறுதியில் சைப்ரஸ் தீவு சென்று தனிமையான குகை ஒன்றில் வாழ்ந்து கி.பி.371ம் ஆண்டில் இறந்தார் ஹிலாரியோன். இத்தூயவரின் விழா அக்டோபர் 21. Thabathaல் கி.பி.291ம் ஆண்டில் பிறந்து வளர்ந்த இவரின் வாழ்க்கைக் குறிப்புக்களை தூய ஜெரோம் அவர்கள் எழுதி வைத்துள்ளார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்) (Pope St. John Paul II)
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.
வாழ்க்கைக் குறிப்பு :
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929ல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். ஜெர்மனிய நாசிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்வியை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ம் ஆண்டு அக்டோபர் 16ல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.
அருளாளர் பட்டம் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே தொடங்கும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு கால தாமதம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வாட்டிகன் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தாரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வாட்டிகன் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.
2014, ஏப்பிரல் 27ம் நாள் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களால், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பேராயர் அந்தோனி மரிய கிளாரெட் Antonius Maria Claret 
இவர் தனது 28 ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பல ஆண்டுகள் கத்லோனியாப் பகுதி (Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார். 1843 ஆம் ஆண்டிலிருந்து முழு நேர மறைப்பணியாளராக பணியாற
்றினார். 1849 ஆம் ஆண்டு கிளரீசியன் (Clarentiner) என்ற துறவற சபையை உருவாக்கினார். 1850-1857 ஆம் ஆண்டுவரை கியூபாவில் (Cuba) ஆர்ச்பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1857 ஆம் ஆண்டு அரசி 2 ஆம் இசபெல்லா (Königin Isabella II) அவர்களின் ஒப்புரவு அருட்சாதன குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார். ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பவந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள விச் (Vich) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
செபம்:
அன்பே உருவான இறைவா! புனித அந்தோனி மரிய கிளாரட் மக்கள் நடுவில் நற்செய்தியை அறிவிப்பதில் அவருக்கு வியப்புக்குரிய அன்பையும், பொறுமையையும் அளித்து திடப்படுத்தினீர். நாங்கள் உமது விருப்பத்தையே அனைத்திலும் தேடவும், சகோதரர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருவதில் ஊக்கமுடன் ஈடுபடவும், அவருடைய வேண்டுதலால் எங்களுக்கு அருள்புரிவீராக
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
அசிசி நகர் புனித பிரான்சிஸ், சபைத் தலைவர் St. Francis of Assisi 
இவர் ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதை பொறுப்பேற்ற முறையில் கழித்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை
அனுபவித்தார். பின்னர் ஒருநாள் சான் தமியானோ என்ற ஆலயத்திற்கு சென்றார். அப்போது இடிந்துபோன ஆலயத்திலிருந்த, சிலுவையானது அசிசியாரின் வாழ்வை மாற்றியது. அச்சிலுவையின் குரல் கேட்டு, பிரான்சிஸ் மனம் உடைந்தார். தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை நினைத்துப்பார்த்தார். மிகவும் வேதனையடைந்து அழுதார். தன்னுடைய பழைய வாழ்விலிருந்து விடுபட்டு, புதிய வாழ்வை வாழ முடிவெடுத்தார். தன்னுடைய தந்தையின் செல்வங்களை வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, தொழுநோயாளிகளின் மத்தியில் வாழ்ந்தார். 

தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் தொழுநோயாளர்களை கட்டித் தழுவி அரவணைத்து முத்தமிட்டார். மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். உடுத்துவதற்குக் கூட மாற்றுத் துணியின்றி வாழ்ந்தார். பிச்சை எடுத்து உண்டார். தான் பெற்ற உணவுப் பொருட்களை தன்னுடன் வாழ்ந்த தொழுநோயாளர்களுக்கும் கொடுத்து, அவர்களின் அன்பைப் பெற்றார். இவற்றைக் கண்ட பிரான்சிஸின் தந்தை மனமுடைந்து அழுது, பிரான்சிசை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் பிரான்சிசோ அதனை வெறுத்தார். இறைவனை விடாப்பிடியாக பற்றிக்கொண்டார். இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். தான் கண்ட ஏழை மக்களிலும், கடவுளின் ஒவ்வொரு படைக்களிலும் இறைவனைக் கண்டார். படைப்புகள் அனைத்தையும் சகோதர, சகோதரியாகக் கொண்டார். 

தான் கண்ட அனைத்திலும் இறைவனை இறுகப் பற்றினார். கடினமான ஏழ்மையை தழுவி, நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தார். அனைவருக்கும் இறைவனின் அன்பை போதித்தார். இவரின் வாழ்வால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டு, இவரை தொடர்ந்தார்கள். இவர்களை கொண்டு ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் துறவற சபையைத் தொடங்கினார். தன்னை பின்பற்றியவர்களுக்கு சிறந்த ஒழுங்கைக் கொடுத்து, இறைவனைப் பின்பற்ற செய்தார். பின்னர் திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று, அவ்வொழுக்கங்குகளை தன் சபையில் நிரந்தரமாக்கினார். இவர் இறைவன் மேல் கொண்ட அன்பாலும், பக்தியாலும் அல்வேர்னா என்றழைக்கப்பட்ட மலையில் இயேசுவின் 5 காய வரம் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளின் வழியாகத் தான் "மறு கிறிஸ்து" என்றே அழைக்கப்பட்டார். 

இவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏராளமானோர் வந்து சேர்ந்தனர். இச்சபை உலகம் முழுவதிலும் பரவியது. துறவிகள் அல்லாத, பொதுமக்களுக்கென்றும், இவர் 3 ஆம் சபையை தோற்றுவித்தார். இவர் மனந்திரும்பிய நாளிலிருந்து, இறக்கும்வரை கடுந்துயருற்றார். ஆனால் சிறிதளவும் சோர்வடையாமல் இருந்தார். "என் உடலில் உள்ள தழும்புகள், நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று, இவர் தன்னுடன் வாழ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அடிக்கடி கூறி, எப்போதும் இயேசுவின் ஊழியனாகவே வாழ்ந்து இறந்தார். 
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மோனிக்கா Monika - புனித அகுஸ்தினாரின் தாயார் - பாதுகாவல்: கிறித்தவ பெண்கள், தாய்மார்கள்

புனித மோனிக்கா சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் (Patricius) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ
்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார். 

தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். இவர் கார்த்தேஜ்(Carthej) என்ற நகரிலிருக்கும் புனித சிப்ரியன் ஆலயத்தில் அமர்ந்து செபிக்கும்போது, தன் மகன் அகுஸ்தீன் உரோம் நகர் சென்றார். இதையறிந்த அத்தாய், மகனைக் காண ஓடோடி கப்பலேறி வந்துகொண்டிருக்கும்போது, சுகமில்லாம் இறந்துவிட்டார்.
செபம்:
துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளிப்பவரே எம் தந்தையே! தன் மகன் அகுஸ்தீனின் மனமாற்றத்திற்காக பரிவன்புடன் கண்ணீர் சிந்திய புனித மோனிக்காவைப்போல, நாங்களும் எங்கள் பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி, உமதருளால் மனமாற்றம் பெற்றிட உதவி செய்தருளும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
லிசியே நகரின் புனித தெரேசா - (St. Thérèse of Lisieux)
பிறப்பு : ஜனவரி 2, 1873, அலேசான், ஃபிரான்சு
இறப்பு : செப்டம்பர் 30, 1897 (அகவை 24) லிசியே, ஃபிரான்சு
அருளாளர் பட்டம் : 29 ஏப்ரல் 1923 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
புனிதர் பட்டம் : 17 மே 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
லிசியே நகரின் தெரேசா, ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்.
'மரி ஃப்ரான்காய்ஸ் தெரேஸ் மார்ட்டின்' (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், துறவற சபையில் குழந்தை இயேசு, மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888ல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர், (sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர், தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ம் அகவையில் இறையடி எய்தினார்.
இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.
குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது.
தெரேசா ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்'னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.
இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.
பிறப்பு :
தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873ம் ஆண்டு சனவரி திங்கள் 2ம் நாள் லூயிஸ் - செலின் தம்பதியரின் 9வது குழந்தையாக பிறந்தார்.
தனது சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று, 1888ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.
சிறு வழியைக் கண்டுபிடித்தல் :
தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894இல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.
படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது:
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது.”
என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.
அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது:
இதோ அப்பகுதி :
“ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.”
கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.
இதையே அவர் "சிறு வழி" (little way; பிரஞ்சு மூலத்தில் petite voie) என்று அழைத்தார். 1895 ஃபெப்ரவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" (toute petite) என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.
தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.
"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்துவிடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்த பிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்புசெய்வதில் குறைபடுவதில்லை."
தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு :
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985ல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986ல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறு என வெளியிடப்பட்டது.
இறப்பு :
தெரசா இறக்கும் தருவாயில் இருந்த போதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை.அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30ம் நாள் தம் 24ம் அகவையில் இறையடி எய்தினார்.
திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் இவருக்கு முத்திப்பேறு பட்டம் 1923ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ம் நாள் வழங்கப்பட்டது. புனிதர் பட்டம் 1925ம் ஆண்டு மே திங்கள் 17ம் நாள் வழங்கப்பட்டது.
1927ல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக பிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944ல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக ஜோன் ஆஃப் ஆர்கோடு அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997ல் இரண்டாம் யோவான் பவுல் இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33ம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
திருக்காட்சியாளர் அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ் Alfons Rodriquez
இவர் ஓர் திருமணமானவர். இவரின் மனைவியும், பிள்ளைகளும் இறந்தபின்னர், இயேசு சபையில் சேர்ந்தார். அதன்பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் மறைப்பணியாற்றினார். பின்னர் இவர், தான் தங்கியிரு
ந்த துறவற இல்லத்தில், வாயில்காப்பாளராக பணியாற்றினார். அச்சமயத்தில் பலமுறை திருக்காட்சியைக் கண்டார். இவர் மிக ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். எப்போதும் கீழ்படிதலுடன் இருந்தார். இவர் தான் பெற்ற திருக்காட்சிகளில் சிலவற்றை கடிதமாகவும் எழுதியுள்ளார்.
செபம்:
சமாதானம் அருள்பவரே எம் கடவுளே! திருமணமான ஒவ்வொரு தம்பதியினரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தங்களின் குடும்ப வாழ்வில் வரும் ஒவ்வொரு துன்பங்களையும், பொறுமையுடன் ஏற்று கொள்ளத் திடமான மனதைத் தாரும். தங்கள் பிள்ளைகளின் நலனை கருதி வாழ, நல் உள்ளம் தாரும். ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பத்தைப்போல வாழ உம் அருள் தந்து, வழிநடத்திட வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
 'பெருக்குமாறின் புனிதர்' மார்ட்டின் டி போரெஸ் - (Saint of the broom) 
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் லீமா என்ற ஊரில் 1579ம் ஆண்டு பிறந்தவர், மார்ட்டின் டி போரெஸ் (St Martin de Porres). இஸ்பானிய உயர்குடியைச் சேர்ந்த யுவான் என்பவருக்கும், அடிமையாகப் பண
ியாற்றி விடுதலை பெற்ற கறுப்பினப் பெண்மணி அன்னா என்பவருக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தவர் மார்ட்டின். இவருக்கு ஈராண்டுகள் நடந்தபோது, இவரது தந்தை, குடும்பத்தைத் தவிக்கவிட்டுச் சென்றார். இவரது தாய் சலவைத் தொழில் செய்து, சிறுவன் மார்ட்டினையும், தங்கை யுவானாவையும் காப்பாற்றினார்.
குழந்தைப் பருவம் முதல் வறுமை, இனவெறி, அடிமைத்தனம் ஆகிய சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்ட மார்ட்டின், முடிதிருத்தும் பணியைக் கற்றுக்கொண்டார். கூடுதலாக, சில மருத்துவ அறிவையும் வளர்த்துக் கொண்டார். இவற்றைப் பயன்படுத்தி வறியோர் பலருக்கு உதவிகள் செய்துவந்தார்.
இளவயதில் இறையழைப்பை உணர்ந்த மார்ட்டின் அவர்கள், தொமினிக்கன் துறவுச் சபையில் சேர விழைந்தார். அக்காலத்தில் பெரு நாட்டில் நிலவிய ஒரு சட்டத்தின்படி, அடிமைகள் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் துறவுச் சபையில் இணைவது தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, 15 வயது நிறைந்த இளையவர் மார்ட்டின், தொமினிக்கன் துறவு இல்லத்தில் துப்புரவுத் தொழில் செய்யும் பணியாளராகச் சேர்ந்தார்.
இவரது நற்பண்புகளைக் கண்ட துறவு இல்லத் தலைவர் இவரை ஒரு சகோதரராக இணைத்துக்கொண்டார். துறவு இல்லத்தில் மிகத் தாழ்வாகக் கருதப்பட்டப் பணிகளை பகல் முழுவதும் ஆர்வமாக மேற்கொண்ட மார்ட்டின் அவர்கள், இரவு நேரம் முழுவதையும் நற்கருணை ஆராதனையில் செலவிட்டார். இறைச்சி உண்பதை முற்றிலும் தவிர்த்தார். லீமா நகரில் தெருக்களில் சுற்றித் திரிந்த ஆதரவற்றச் சிறுவர் சிறுமிகளுக்கு ஓர் இல்லம் அமைத்து, அவர்களைப் பராமரித்து வந்தார்.
அவ்வேளையில், லீமா நகரில் தொற்றுநோய் பரவியது. இளையவர் மார்ட்டின் அவர்கள், தொற்றுநோயால் தெருக்களில் விடப்பட்ட ஆதரவற்றோரை துறவு இல்லத்திற்குக் கொணர்ந்து கண்காணித்தார். தொற்றுநோயுற்றோர் வந்ததால், துறவு இல்லம் அழுக்கடைந்தது என்றும், துறவு இல்லத்தில் தொற்றுநோய் பரவும் என்றும் எதிர்ப்பு எழுந்தது. அவ்வேளையில் இளையவர் மார்ட்டின் அவர்கள், "சுத்தமாக இருப்பதைக் காட்டிலும், கருணையுடன் வாழ்வதே மேல்" என்று கூறியபடி, எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தன் பணிகளைத் தொடர்ந்தார்.
1639ம் ஆண்டு, தன் அறுபதாவது வயதில் இறையடி சேர்ந்த மார்ட்டின் டி போரெஸ் அவர்களை, 1962ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் புனிதராக உயர்த்தினார். 'பெருக்குமாறின் புனிதர்' (Saint of the broom) என்றும், 'பிறரன்பின் மார்ட்டின்' என்றும் போற்றப்படும் புனித மார்ட்டின் டி போரெஸ் அவர்கள், மிருகங்களோடு பேசும் வல்லமை பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 
இனப் பாகுபாடுகளால் ஒதுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், இனங்களுக்கிடையே நல்லிணக்கம் உருவாவதற்குப் பாதுகாவலராகவும் கருதப்படும் புனித மார்ட்டின் டி போரெஸ் அவர்களின் திருநாள் நவம்பர் 3ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Sep 15 : St.Catherine of Genova
25 ஆண்டுகள் ஒப்புரவு அருளடையாளத்தை முழுமையாய் நிறைவேற்ற இயலாதவர்:
கத்தோலிக்கத் திருஅவையில் ஒருவர் பாவமன்னிப்புப் பெறுவதற்காக, அருள்பணியாளர் நிறைவேற்றும் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற, 25 ஆண்டுகளாகச் சென்றும், தனது மனதை மு
ழுமையாய்த் திறந்து சொல்ல இயலாமல், பாதியிலேயே அதனைக் கைவிட்டவர் புனித கேத்ரீன். இவர் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இதற்கான விளக்கத்தை தனது ஆன்ம குரு மரபோத்தியிடம் விளக்கியிருக்கிறார். ஜெனோவாவில் செல்வக்குடும்பத்தில் பிறந்த கேத்ரீன், 16வது வயதில் ஜூலியானோ அதோர்னோவுக்குப் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அன்பற்ற தனது கணவரின் கடுங்கோபம், நம்பிக்கைத் துரோகம், ஊதாரித்தனம் போன்றவற்றால் பத்து ஆண்டுகள் திருமண வாழ்வில் கடும்துன்பங்களை மௌனமாக ஏற்றுக்கொண்டார் கேத்ரீன். பின்னர் ஆறுதல்தேடி, அருள்சகோதரியான தனது அக்கா சேர்ந்திருந்த துறவு இல்லம் சென்றார். ஆனால் அவரது அக்காவோ, கேத்ரீனை ஆலயம் சென்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெற்று பாவமன்னிப்புப் பெறுமாறு கூறினார். அது 1473ம் ஆண்டு மார்ச் 22. அன்று கேத்ரீன் ஆலயம் சென்று அருள்பணியாளரிடம் பாவங்களை அறிக்கையிடத் தொடங்கினார். அச்சமயம் திடீரென கடவுளின் அன்பை அதிகமாக உணர ஆரம்பித்தார். கடவுளின் ஆற்றல் கேத்ரீனில் இறங்கியது. ஆதலால் ஒப்புரவு அருளடையாளத்தை முழுமையாக நிறைவேற்றாமல் ஆலயத்தைவிட்டு வெளியேறினார். அன்று தொடங்கி அடுத்த ஏறக்குறைய 25 ஆண்டுகள் இந்த அருளயடையாளத்தை நிறைவேற்ற அடிக்கடி ஆலயம் சென்றார் கேத்ரீன். ஆனால் எல்லா நேரங்களிலும் அதனை பாதியிலே விட்டுவிட்டு வந்தார். இச்சமயங்களில் ஏற்பட்ட ஆழ்ந்த இறையனுபவத்தால், ஜெனோவா மருத்துவமனை சென்று நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தன்னலமற்ற சேவையாற்றத் தொடங்கி அச்சேவைக்கே தன்னை முழுமையாய் அர்ப்பணித்தார் கேத்ரீன். பின்னர் அம்மருத்துவமனையின் நிர்வாகியானார். கேத்ரீனின் கணவர் அதோர்னோவும் பின்னர் மனம்மாறி, அதே மருத்துவமனையில் பிறரன்புச் சேவையில் ஈடுபட்டார். செபத்தில் பல ஆழ்ந்த இறையனுபவங்களை பெற்ற ஜெனோவா நகர் புனித கேத்ரீனின் விழா செப்டம்பர் 15. 1447ம் ஆண்டு பிறந்த இவர் 1510ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ஜெனோவாவில் காலமானார். 
கேத்ரீனின் பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் கேத்ரீன்தான் கடைக்குட்டி. இவருக்கு 16 வயது நடந்தபோது இவரது தந்தை காலமானார். அதனால் அதே ஆண்டு கேத்ரீனுக்குத் திருமணம் நடந்தது. கேத்ரீனின் கணவர் ஜூலியானோ அதோர்னோ, மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரம் செய்து பல அனுபவங்களைப் பெற்றவர், செல்வந்தர்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித வனத்து அந்தோணியார் (251–356)

எகிப்தில் செல்வச் செழிப்புமிக்க நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர் அந்தோணி. இவருக்கு 18 வயது நடந்தபோது திடீரென இவரது பெற்றோர் இறந்தனர். திருமணமாகாத சகோதரி இவரது பொறுப்பில் விடப்பட்டார். பெற்றோரது இழப்பின் துயரத்தில்
 இருந்தபோது, ஒருநாள், 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்' என்ற இயேசுவின் அருள்வாக்கை வாசிக்கக் கேட்டார். இந்த அருள்வாக்கை அப்படியே ஏற்ற அந்தோணி, தனது குடும்பச் சொத்தின் ஒரு பகுதியை அண்டை வீட்டாருக்குக் கொடுத்தார். எஞ்சியுள்ள சொத்தை விற்று அப்பணத்தை ஏழைகளுக்கான நிதி சேமிப்புக்குக் கொடுத்தார். தனது சகோதரியை ஒரு கிறிஸ்தவ கன்னியர் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, அலெக்சாந்திரியாவின் மேற்கிலுள்ள பாலைநிலத்துக்குச் சென்றார். அங்கு தனியாகச் செபத்திலும் தபத்திலும் செலவழித்தார். மனச்சோர்வு, சோம்பல், அழகான பெண்கள் போன்ற வடிவங்களில் சாத்தான் இவரைக் கடுமையாய்ச் சோதித்தது. இவர் நினைவிழக்கும் நிலைக்கு, சில நேரங்களில் சாத்தான் இவரைக் கொடூரமாய் அடித்துப்போட்டது. அவர் இப்படி படுத்துக் கிடந்ததை மக்கள் பார்த்துள்ளனர். ஒரு சமயம், ஓநாய்கள்,குள்ளநரிகள், சிங்கங்கள், பாம்புகள், தேள்கள் போன்ற கொடிய காட்டு விலங்குகள் அவரைத் தாக்குவதற்குத் தயாராக அவர்முன் நின்றன. அப்போது அவர் சப்தமாகச் சிரித்துக்கொண்டே, என்னைத் தாக்குவதற்கு உங்களில் ஒருவரே போதும் என்று சொன்னவுடன், புகைபோன்று அவை மறைந்து போயின. ஒருமுறை இவர் நடந்துபோகும்போது வழியில் தட்டு நிறைய வெள்ளிக் காசுகள் கிடந்தன. பின்னர் ஒருநாள் தங்கக் காசுகளைக் கண்டார். பாலைநிலத்தில் சாத்தான் இப்படி அந்தோணியாரைப் பல வழிகளில் சோதித்தது. அனைத்துச் சோதனைகளையும் ஆழ்ந்த செபத்தால் வெற்றி கண்ட இவர், புனித வனத்து அந்தோணியார், புனித பெரிய அந்தோணியார் என அழைக்கப்படுகிறார். அனைத்துத் துறவிகளுக்கும் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவரின் விழா சனவரி 17.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ரேகன்ஸ்பூர்க் ஆயர் வோல்ஃப்காங்க் Wolfgang von Regensburg 
பாதுகாவல்: ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டம், வீட்டு வேலை செய்பவர்கள், கப்பலோட்டிகள், வலிப்பு நோயிலிருந்து 


இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் தான் படிக்கும்போது ஹென்றி என்பவரின் நண்பரானார். இவரே 956 ஆம் ஆண்டில் டிரியரில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால் அவரின் அழைப்பை ஏற்று டிரியரிலுள்ள பேராலயப்பள்ளிக்கு 964 ல் பேராசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில்தான், தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் துறவற இல்லம் நோக்கி சென்றார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்பூர்க் ஆயர் உல்ரிஷ் (Ulrich) அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

பின்னர் இவர் ஆஸ்திரியா சென்று நற்செய்தியை பறைசாற்றினார். இவரின் மகத்துவமிக்க மறைப்பணி பாசாவ் ஆயராக (Passau) இருந்தவரை கவரவே, அவரை ரேகன்ஸ்பூர்கில் ஆயரில் பொறுப்பை ஏற்கும்படி கூறினார். இச்செய்தியை கேட்டவுடன் வோல்ஃப்காங்க் மிக அதிகமாக பயமுற்று, நோய்வாய்பட்டார். ஆனால் இறையருளால் மீண்டும் நலம்பெற்றார். இவ்வற்புதத்தை அறிந்த அப்போதைய அரசர் 2 ஆம் ஓட்டோ (Otto II) வோல்ஃப்காங்க் 972 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க் ஆயராக அறிவித்தார். இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண்துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர். இவர் ரேகன்ஸ்பூர்கிலிருந்து ஆஸ்திரியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தார். 

இவரின் உடல் ரேகன்ஸ்பூர்க்கில் எம்மராம் (St.Emmeram) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் புதைக்கப்பட்டது. பிறகு இவரின் கல்லறைமேல் கெபி ஒன்றும் கட்டப்பட்டது. இக்கெபி இன்று மக்களால் புனிதத்தலமாக கருதப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது. 
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்றைய நாளில் தங்களின் நாம விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள சுகம் தந்து காத்தருளும். உமது ஆவியின் அருள்கொடைகளால் நிரப்பி, உமது கண்ணின் கருவிழிக்குள் வைத்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
January 14 – Deavasahayam.
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்பிரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
1741இல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.
நாளடைவில் இந்த டிலன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி கிறித்தவத்தை டிலனாய் அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி (Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.
இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறித்துவுக்காக தனது உயிரையும் கொடுக்க அணியமான தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார்.
அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர்.
புனிதர் பட்ட நடவடிக்கைகள்
தேவசகாயம் பிள்ளை கிறித்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) என்பவர் 1756இல் உரோமையில் திருத்தந்தையிடம் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.
பின்னர் 1993இல் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் முதல் படியாக இவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார்.
ஜூன் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார்.
கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில் தொம்மச்சன் என்பவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையும் துறவறத்தைத் தழுவியவர்கள் அல்ல, மாறாக பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
யேசு சபை குரு ரூபர்ட் மாயர் Rubert Mayer SJ
இவர் தனது இளம் வயது கல்வியை ஸ்டுட்கார்டில் கற்றார். பின்னர் தனது தத்துவயியல் ஃப்ரைபூர்கிலும் (Freiburg), இறையியலை மியூனிக்கிலும், 5 ஆம் செமஸ்டர் இறையியலை தூபிங்கனிலும்(Tübingen) கற்றார். தன் குருத்துவப்பயிற்ச
ியை ரோட்டன்பூர்க்கில்(Rottenburg) மேற்கொண்டார். மே மாதம் 2 ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் தனது மறைப்பணியைத் தொடங்கினார். தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் இவர் வல்லவராய் திகழ்ந்தார். 

இவர் 1906 ஆம் ஆண்டில் தனது மறைபரப்புப் பணியை சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி முழுவதிலும் ஆற்றினார். பிறகு 1912 ஆம் ஆண்டு பெட்டிங்கர் நகர் கர்தினால் (Kardinal von Bettinger) இவரை மியூனிக் திரும்பி வரும்படி அழைத்தார். 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் மூண்டது. அப்போது ரூபர்ட் மாயர், அனைவருக்கும் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் திகழ்ந்தார். இவர் பல முறை போரில் ஈடுபட்ட படைவீரர்களை காப்பாற்றினார். இதனால் இவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். இருப்பினும் தனது மறையுரையால் மக்களை காத்தார். இவர் தன்னுயிரை ஈந்து மற்றவர்களுக்கு பலமுறை வாழ்வளித்தார். 1921 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுற்றபோது, ஏறக்குறைய ஒரு மாதத்தில் 70 முறை மறையுரை ஆற்றி, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டி நம்பிக்கை வழங்கினார். இவர் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தார். இதனால் 1937 ஆம் ஆண்டு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார். இவருக்கு மறையுரை ஆற்ற தடைவிதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்கள் தண்டனையை அனுபவித்தார். அதன்பிறகு மீண்டும் மறைபணியை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். மறைப்பணியை ஆற்றத் தொடங்கிய சில நாட்களில் மீண்டும் சாக்ஸஹவுசன் (Sachsenhausen) என்ற இடத்திலிருந்து வதை முகாமிற்கு(Concentration Camp) பிடித்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயால் தாக்கப்பட்டார். அதன்பிறகு 5 ஆண்டு காலம் பவேரியாவில் இருந்த எட்டல் துறவறமடத்தில் வாழ்ந்தார். அங்கு 5 மாதங்கள் மட்டுமே அவரால் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றமுடிந்தது. மியூனிக்கில் உள்ள ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் சிலுவையை நோக்கி செபிக்கும்போது இறைவனடி சேர்ந்தார். இன்று மியூனிக்கில் இவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பெற்று புகழ்வாய்ந்த ஆலயமாக திகழ்கின்றது. 
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! முதல் உலகப்போரில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் இவ்வுலகில் செய்த சிறுசிறு பாவங்களையும் மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
குரு பெர்னார்டு லிஸ்டன்பெர்க் Bernhard Lichtenberg 
இவர் மிக தைரியத்துடன் யூதர்களிடையே கிறிஸ்துவ விசுவாசத்தைப் பற்றி போதித்தார். 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1928 ஆம் ஆண்டு பெர்லினில் யூதர் கூட்டம் ஒன்றில் கிறிஸ்துவ மறையைப் பற்றி ப
ேசினார். இவர் மற்ற குருக்களுக்கு முன்மாதிரிகையாக திகழ்ந்தார். இவர் ஓர் சிறந்த ஆன்ம குரு என்ற பெயர் பெற்றார். இவர் 1941-1942 ஆம் ஆண்டுவரை கிறிஸ்துவ மறையைப் பற்றி பொது இடத்தில் பேசினார் என்பதற்காக சிறைபிடித்து செல்லப்பட்டார். அப்போது இவர் மீது சாட்டப்பட்ட அனைத்து பழிகளையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். சாகும் வரை இவர் சிறையில் பல விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார். கசப்பான மற்றும் புளிப்பற்ற காடியை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். கெட்டுப்போன அழுகிய உணவுப்பொருட்களை உண்ண வற்புறுத்தப்பட்டார். இதனால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார். 

அப்போது இவர் ஏறக்குறைய 70 ஆம் வயதை அடைந்தார். முதியவரான இவரை அச்சிறையிலிருந்து, டாஹவ்(Dachau) வதை முகாமிற்கு மாற்றினர். அங்கு அவர் மிக மோசமாக நோய்வாய்ப்படவே, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்ற சில நாட்களில் மருத்துவப் பலனின்றி உயிர் இழந்தார். 
செபம்:
அன்பின் இறைவா! உமது இறை விசுவாசத்தைப்பரப்பி, இறுதிவரை உம்மில் வாழ்ந்து இறந்த பெர்னார்டைப்போல, ஒவ்வொரு குருக்களும் தங்களின் குருத்துவ மேன்மையை உணர்ந்து, உண்மையுள்ள ஊழியர்களாக வாழ்ந்து, சாட்சியம் புரிந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித அகுஸ்தீன்/ அகுஸ்தினார் / அகஸ்டீன் St.Augustine - ஆயர், மறைவல்லுநர்
புனித அகுஸ்தீன் தனது இளமைப் பருவத்தை தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றி கழித்தார். தன் தாய் மோனிக்காவின் இறைவேண்டலினால் மனந்திரும்பினார். பின்னர் இறைநூலைப் படி
த்தும், தன் தாயின் விருப்பப்படியும் இறைவழியில் சென்றார். 

மிலானில் மனந்திரும்பிய இவர், 387 ஆம் ஆண்டில், மிலான் ஆயர் அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். தனது 42 ஆம் வயதில் ஹிப்போ என்றழைக்கப்படும் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் தம் மந்தைக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வழங்கினார். ஏராளமான மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களை பயிற்றுவித்தார். ஏறக்குறைய 100 நூல்களுக்கும் மேல் எழுதினார். அவற்றைக் கொண்டு தம் காலத்தில் நிலவிய தவறான கருத்துக்களுக்கு எதிராக இடையறாது போராடினார். திறம்பட திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார். 
செபம்:
எண்ணங்களை கடந்து செயல்படுபவரே! உம் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். புனித அகுஸ்தீன் மனந்திரும்பி உம்மை ஏற்றுக்கொண்டு. பின்பற்றியதுபோல வழி தவறி அலையும் இளையோர்களை உம்பால் ஈர்த்து அவர்களில் உம் சித்தத்தை நிறைவேற்றிட வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை'
1845ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் பிறந்த Juana Cipitria Barriola அவர்கள், வறுமையில் வாடிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற, சிறுவயதிலேயே பிற இல்லங்களில் பணி செய்தார். Salamanca என்ற நகரில் வேலை தேடிச் ச
ென்ற இவர், அந்நகரில் நிலவிய வறுமையை ஒழிக்க உறுதி பூண்டார்.
"நான் கடவுளுக்கு மட்டுமே உரியவள்." என்று அடிக்கடி கூறி வந்த Juana அவர்கள், 23ம் வயதில் இறை அழைப்பை ஏற்றார். 1871ம் ஆண்டு, 'இயேசுவின் புதல்வியர்' என்று அழைக்கப்படும் துறவு சபையை ஆரம்பித்தார். இயேசுவின் கேன்டிடா மரியா (Candida Maria de Jesus) என்ற பெயருடன் தன் அருள் பணிகளைச் செய்தார்.
Juana அவர்கள் ஆரம்பித்தத் துறவுச் சபை, புனித இலயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இத்துறவு சபை, 1902ம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் அங்கீகாரம் பெற்றது. வறுமைப்பட்ட பெண் குழந்தைகளின் கல்வியில் இத்துறவுச் சபை அதிகம் ஈடுபட்டது. 
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் பணிபுரிந்த Juana அவர்கள், 1912ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவரது 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1996ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். 2010ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் கேன்டிடா மரியா அவர்களைப் புனிதரென அறிவித்தார்.

No comments: