10/30/2018

மறைசாட்சி செசிலியா 
பாதுகாவல்: இசைக்கருவி தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் 


இவர் ஓர் ரோமன் கத்தோலிக்க உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இவர் தனது மனதிற்குள் இறைவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இயேசுவை தன் கணவராக நினைத்து வாழ்ந்தார். ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை வலேரியானூஸ் என்ற இளைஞர்க்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவைகளை செசிலியா பெரியதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியானூஸ்சுடன் திருமணம் செய்ய இருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார். 

இவர்தான் திருமணம் செய்யும் நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிந்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். கணவரிடம் பெற்றோர் இவரை ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார். 

வலேரியானூஸ், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன் கடவுளின் தூதர் ஒருவரை தன்னிடம் பேசுமாறு கூறினார். செசிலியா அதை நிரூபிக்க வலேரியானூஸ் முதலில் திருத்தந்தையிடம் திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு படிந்து அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று ரோஜா மலர் ஒன்றை கொடுத்து அவரை வாழ்த்தினார். அதன்பின்னர் வலேரியானூஸ் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியானூஸ் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடைபுரிந்தனர். 

செசிலியா தான் மணந்த வலேரியானூசின் உதவியுடன் கடவுளின் அன்பை சுவைத்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்புச் செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றி புகழ்ந்தார். இவரின் பக்தியை கண்ட எதிரிகள் கொதிக்கும் சூடான நீரில் அவரை மூழ்கடித்து அக்கொடியவர்களின் ஆசைத் தீர அணுஅணுவாக கொன்றனர். கொதிக்கும் சூடான நீரில் இவர் மூன்று நாள் எத்தீக்காயமும் இல்லாமல் உயிருடனே இருந்தார். இவர் கிறிஸ்துவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார். 
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! புனித செசிலியாவின் திருநாளை சிறப்பிக்கும் இவ்வினிய வேளையில் உம்மை நோக்கி எழும் எங்கள் மன்றாட்டுகளுக்கு தயவாய் செவிசாய்த்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால் எங்கள்மீது இரங்கி நாங்கள் கேட்கும் வரங்களை தந்தருளும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Our Lady of Guadalupe) குவாதலூப்பே அன்
ஹூவான் தியெகோ(Juan Diego) என்பவர், மெக்சிகோ நாட்டின் Aztec பூர்வீக இனத்தைச் சார்ந்தவர். இவர், 1531ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று திருப்பலியில் பங்கு கொள்வதற்காக, மெக்சிகோ நகரின் புறநகரிலுள்ள ஓர் ஆலயத்துக்கு Tepey
ac குன்று வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் மிகுந்த ஒளியின் மத்தியில் ஒரு பெண்ணின் குரல் அவரைக் அக்குன்றின் உச்சிக்கு ஏறி வருமாறு அழைத்தது. 
தியெகோ அங்கு ஏறிச் சென்றபோது, அப்பெண் தியெகோவின் தாய்மொழியான Nahuatl மொழியில், "வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடிவரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும், இதை மெக்சிகோ நகர் ஆயரிடம் சொல்" என தியெகோவை அனுப்பினார். தியெகோ அதனைத் தெரிவித்தபோது ஆயர் நம்பவில்லை. அடுத்த நாளும் இவ்வாறு நடந்தது. பின்னர் ஆயர் தியெகோவிடம், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு கூறினார். அன்று மாலையே தியெகோ அன்னை மரியாவிடம் நடந்ததைச் சொன்னார். 
அன்னைமரியாவும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் தியெகோவின் மாமா ஹூவான் பெர்னார்தினோ, திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை. இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி அருளடையாளம் 
கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஓர் அருள்பணியாளரை அழைக்கச் சென்றார் தியெகோ. அப்போது அன்னைமரியா, அக்குன்றின் அடியில் இருந்த சாலையில் தியெகோவுக்குக் காட்சியளித்து அவரின் மாமா நலமடைவார் எனவும், உடனே தான் முன்னர் மூன்று முறை காட்சியளித்த Tepeyac குன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார். இந்தப் பாறைக் குன்றின் உச்சியில், அதுவும் டிசம்பரில் எந்த மலர்களும் இருக்காது என்று தெரிந்திருந்தும் தியெகோ அங்குச் சென்றார்.

ஆனால் மெக்சிகோவில் பூக்காத Castilian ரோஜா மலர்களை அங்கு கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்துவந்து அன்னை மரியாவிடம் கொடுத்தார். அந்த மலர்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக்கொடுத்து அதை ஆயரிடம் கொண்டுபோகச் சொன்னார் அன்னை மரியா. மெக்சிகோ பேராயர் Fray Juan de Zumárraga முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார் தியெகோ. அதிலிருந்து மலர்கள் கொட்டின. அதோடு அதில் அழகிய அன்னைமரியாவின் உருவமும் பதிந்திருந்தது. தியெகோ எப்படி வருணித்திருந்தாரோ அதே மாதிரியான உருவம் அதில் இருந்தது. அதேநாளில் அன்னை மரியா, தியெகோவின் மாமா ஹூவான் பெர்னார்தினோவுக்கும் தோன்றி நல்ல சுகம் அளித்தார். தனது இந்த உருவத்தை “குவாதலூப்பே அன்னை”என்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னைமரியா சொல்லியிருந்தார். இவ்வாறு Tepeyac குன்றில் ஆலயம் எழுப்பப்பட்டு, அது குவாதலூப்பே அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்று உலகில் திருப்பயணிகள் அதிகமாகச் செல்லும் திருத்தலங்களில் மூன்றாவதாக இது உள்ளது. குவாதலூப்பே அன்னை, அமெரிக்காவின் பாதுகாவலர். இவ்வன்னை மரியின் விழா டிசம்பர் 12.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus) - ஆயர், மறைவல்லுநர்(Bishop & Doctor of the Church)
இவர் 430 ஆம் ஆண்டு இராவென்னா என்ற நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நகரில் புகழ்மிக்க பணக்காரர்கள் வசித்து வந்தனர். இதனால் உரோமை பேரரசரால் அந்நகர் 
சுற்றி வளைக்கப்பட்ட கைப்பற்றப்பட்டது. அரசர் ஹோனோரியுஸ்(Honorius) என்பவரால் இராவென்னா மக்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள். 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 50ஆண்டுகள் கொன்ஸ்டானிநோபிளில் வாழ்ந்த அரசன் ஒருவன், திருச்சபையைப்பற்றி தவறாக போதித்தான். இதனால் ஆயர் பீட்டர் இதனை சுட்டிக்காட்டி, தவற்றை திருத்திக்கொள்ளவேண்டுமென்று எச்சரித்தார். 

ஆயர் தன் மறைமாநிலம் முழுவதும் மிக எளிமையான முறையில் திருப்பலி நிறைவேற்றி, பொருள் தரும் வகையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனங்களில் இடம்பிடித்தார். பின்னர் மிலான் மறைமாநிலத்திற்கு சென்று அங்கிருந்த சில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். மீண்டும் இராவென்னா வந்த பிறகு, உரோமை அரசரின் கீழிருந்த தன்னுடைய மறைமாநிலத்தை, திருத்தந்தையின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அந்தியோக்கியா நகரிலிருந்த இறையியல் பள்ளிக்கு தேவையான சில புத்தகங்களை எழுதினார். இவரின் நூல்கள் அனைத்திலும் மரியன்னைக்கென்று சிறப்பிடத்தை தந்துள்ளார். இதன் வழியாக இவர் அன்னையின் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பதை அறியலாம். 

இவர் ஆயராக பணிசெய்த ஆண்டுகளில் கிறிஸ்துவத்தை பணக்கார மக்களிடையே பரப்பி, அவர்களை இறைவன்பால் ஈர்த்தார். பலரால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் மிக எளிதாக தீர்த்துவைத்தார். பல நாடுகளிடையே சமாதானத்தை கொண்டுவந்தார். ஒற்றுமையின்றி இருந்த அரசர்களை சேர்த்து வைத்து, கிறிஸ்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். தான் எழுதிய பல இறையியல் நூல்களின் வழியாக பல குருக்களின் வாழ்வை மாற்றி, இறையழைத்தலை பெருகச் செய்தார். இவர் தன் மறைமாநிலம் முழுவதும் பல ஆலயங்களை எழுப்பினார். பல கல்விக்கூடங்களையும், இறையியல் கல்லூரிகளையும் நிறுவினார். தான் சென்ற இடமெல்லாம் மக்களை ஒன்றுகூட்டி போதித்தார். ஒவ்வொரு போதனைகளிலும் " மனிதனுக்கு பட்டம், பதவி, பணம் இவற்றைவிட செபம் என்பது மிகவும் அவசியமானது. செபிக்காதவன் இறந்தவன்; நம் செபம் இவ்வுலகில் மணம் வீச வேண்டும்" என்று தவறாமல் கூறுவார். அவ்வாறு ஒருநாள் போதித்து முடித்தபிறகு, மிக அமைதியாக அமர்ந்தபோது, எவ்வித சலசலப்புமின்றி ஆழ்ந்த அமைதியில் இறைவனடி சேர்ந்தார். 
செபம்:
என்றும் வாழும் தந்தையே! செபமே வாழ்க்கை என்று வாழ்ந்து, செபத்தின் வழியாக தான் பெற்ற அருள்கொடைகளை உம் மக்களுக்காக பயன்படுத்திய புனித பீட்டரைப்போல, எம்மையும் நீர் பயன்படுத்தும். நாங்கள் செபிக்கின்ற செபத்தின் வல்லமை, இவ்வுலக மக்களுக்கு பயன்தர எங்களை தயார் படுத்தும். மிகுந்த நாவன்மை பெற்று உம்மை இவ்வுலகில் பறைசாற்ற எமக்கு உமது வல்லமையை தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)
பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புதுநன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ம
ரியன்னையிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வியைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர்ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைபரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசிபிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட்டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரையேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த்தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக்கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளிகூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய்தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாசத்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரியன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப்பார். 

அப்போது புத்துனாதீவை ஆட்சி செய்த அரசனின் மகன் அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட்களை அனுப்பி பீட்டர் ஷானலை கொடுமையாக கொல்லக்கூறினான். அதனால் அக்கொடிய மனிதமிருகங்கள் அருட்தந்தை பீட்டர் ஷானலை 1842 ஆம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர். இவரோடு சேர்ந்து புத்தினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அரசன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்தந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் புத்தினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறித்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர். 
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) – மறைசாட்சி
இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான். 

"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான். இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். 
மரியா இறந்த 50 ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார். 
செபம்:
இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித முதலாம் யோவான் (St. John I) - திருத்தந்தை, மறைசாட்சி 
இவர் ஹார்மிஸ்தாஸ்(Hormisdas) என்ற திருத்தந்தைக்கு அடுத்தப்படியாக 523 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாள் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கான்ஸ்டாண்டினோபிள் என்ற நகரில், ஒரு தூதவராக காலடி எடுத்து வைத்த முதல் திருத்தந்தை. இவர் திருத்தந்தையாக இருந்தபோது, ஆரியமதத்தை சேர்ந்த சேர்ந்த அரசர் முதல் தியோடரிக்(Theoderich) உரோம் நகரை ஆட்சி செய்து வந்தான். அப்போது கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த மன்னர் ஜஸ்டினோஸ்(Justinos) அந்நகரிலிருந்த ஆரிய மதத்தை சார்ந்த முதலாம் ஜஸ்டினோஸ் என்பவரை கொடுமைப்படுத்துகிறான் என்பதைப்பற்றி கேள்விப்பட்டான். இதனால் மன்னர் ஜஸ்டினோஸிடம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசவும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தவும் வேண்டி, அரசர் தியோடரிக், திருத்தந்தையை தூதுவராக கான்ஸ்டாண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தார். திருத்தந்தையை அன்புடன் நடத்துமாறு அந்நாட்டு மன்னருக்கு தூதுவிட்டான். 

அப்போது திருத்தந்தை, மன்னர் ஜஸ்டினோஸிடம் மிகவும் அன்பாகவும், ஞானத்தோடும், பேசி எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவைத்து, நல்லதோர் உறவை ஏற்படுத்தி, சமாதான உடன்படிக்கை செய்து வைத்துவிட்டு, மீண்டும் திருத்தந்தை இத்தாலி நாட்டிற்கு திரும்பினார். நடந்தவைகள் அனைத்தையும் அரசர் தியோடரிடம் எடுத்து கூறினார் திருத்தந்தை. திருத்தந்தை ரோம் திரும்பிய சில மாதங்களிலேயே கான்ஸ்டாண்டினோபிள் மன்னன், அவரை சந்தித்து பேச உரோம் வந்தான். இவர்கள் இருவருக்கும் நல்லதோர் உறவு ஏற்பட்டது. திருச்சபையையும், நாட்டையும் நல்வழியில் வழிநடத்த ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்தனர். இவர்களின் நல்லுறவை கண்ட அரசர் தியோடரிக், பொறாமைக்கொண்டு பயமுற்றான். அவர்கள் இவனுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணினான். இதனால் தியோடரிக் ஆத்திரம்கொண்டு மன்னன் ஜஸ்டினின் ஆட்களில் ஒருவரான பொயித்தியஸ்(Poithias) என்பவரைக் கொன்றான். அதன்பின் திருச்சபைக்கெதிராக பல அநியாயங்களை செய்தான். பிறகு ராவென்னா நகரில் திருத்தந்தையைச் சிறையிலிட்டான். அங்கு அவர் சொல்லொண்ணாத் துயரங்களை அடைந்தார். கொடிய வேதனைக்குப்பின் உயிர்நீத்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப்பின் தியோடரிக்கும் இறந்தார். ஆனால் அவன் இறப்பதற்கு முன் தனக்குப்பிடித்த ஒருவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்துவிட்டு இறந்தான். 
செபம்: எல்லாம் வல்ல இறைவா! நீர் சிலுவைச் சாவை சுமந்து, உயிர் நீத்ததைப்போல, கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப பல ஆயர்களும், குருக்களும், கன்னியரும், பொதுநிலையினரும் உயிர் துறந்துள்ளனர். இவர்களின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, எம்மை முழுவதும் அர்ப்பணித்து உமக்காக வாழ்ந்திட உம் அருளைப் பொழிந்தருளும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்) (Pope St. John Paul II)
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.
வாழ்க்கைக் குறிப்பு :
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929ல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார்.
ஜெர்மனிய நாசிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்வியை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ம் ஆண்டு அக்டோபர் 16ல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.
அருளாளர் பட்டம் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே தொடங்கும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு கால தாமதம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வாட்டிகன் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தாரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வாட்டிகன் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.
2014, ஏப்பிரல் 27ம் நாள் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களால், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
அவிலாவின் புனித தெரேசா ( St. Theresa of Avila ) கன்னியர், மறைவல்லுநர் :(Virgin, Doctor of the Church)
பிறப்பு : மார்ச் 28, 1515 கோடரெண்டுரா, அவிலா, (இன்றைய ஸ்பெயின்) (Gotarrendura, Ávila, Crown of Castile (Today Spain)
இறப்பு : 4 அக்டோபர் 1582 (அகவை 67) அல்பா தே தொர்மஸ், எசுப்பானியா (Alba de Tormes, Salamanca, Spain)
அருளாளர் பட்டம் : ஏப்ரல் 24, 1614 திருத்தந்தை ஐந்தாம் பவுல்; ரோம்
புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622 திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி; ரோம்
அவிலாவின் புனித தெரேசா, அல்லது இயேசுவின் புனித தெரெசா, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். ஸ்பெயின் நாட்டினரான இவர், கார்மேல் சபைத்துறவி ஆவார். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். சிலுவையின் புனித யோவானோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்கினார். இவரின் ஆழ்நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமையும் இவரையே சாரும்.
தெரசா, 'அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா' ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் 'பெயாட்ரிஸ் டீ அஹுமதா' (Beatrix de Ahumada) ஆகியோரின் மகளாக பிறந்தார்.
சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும் பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள். இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுத்தான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும் கூறினார்.
இவர் தனது 7ம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527ல் அவரின் 12ம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535ம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.
அப்போது தெரசா நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில் 1539ம் ஆண்டு, இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். இவைகளை உடனிருந்த அருட்சகோதரிகள் நம்பிக்கை கொள்ளாமல், அவருக்கு எதிராக செயல்பட்டனர்.
அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கினர்.
1560ல் தனது 45ம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப்போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் 1562ல் தெரசா அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு தன் வாழ்வை வாழ்ந்தார். செபம் ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டார். இவரின் செப வாழ்வால் 1568ல் மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். பின்னர் 1577ம் ஆண்டில் 17 பெண்கள் துறவற இல்லமும், 15 ஆண்டுகளுக்கான துறவற இல்லமும் காணப்பட்டது. இவ்வில்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.
தெரசா பல முறை திருக்காட்சியைக் கண்டார். இவைகளை 400க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதினார். இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் திருக்காட்சியின் மறைவல்லுநர் என்றழைக்கப்பட்டார். தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி செய்த தெரசா தனது 65ம் வயதில் உடல்நிலை குன்றி இறைவனடி சேர்ந்தார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும், புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே. புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற்றில் குறிப்பிடும் மாற்கும் இவரே. இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர்.
திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர் மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர். பேதுருடைய சீடரும், அவருடைய மொழிபெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர். எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார். எருசலேம் திருச்சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும், புதுக் கிறிஸ்துவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உதவியாகவும், இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய். முதன்முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும்போது இவரை உடன் அழைத்துச்சென்றார்.
அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிருந்தபோது, மாற்கு அவர்களை விட்டுப்பிரிந்துவிடுவார் என்று அச்சம்கொண்ட பவுல், சிலிசியா, சிறிய ஆசியாவிலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோது, பர்ணபாஸ் பரிந்துரைத்ததால், பவுல் மாற்கை அழைத்துஸ் செல்லவில்லை. இதனால் பர்ணபாவும் பவுலைவிட்டுப்பிரிந்தார். உரோமை நகரில் பவுல் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, மாற்கு பவுலுக்கு உதவி செய்தார். பவுல் தான் இறக்கும்முன்பு, உரோமை சிறையில் இருந்தார். அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.
பின்னர் மாற்கு, புனித பேதுருவின் நண்பனானார். அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட், இரனேயுஸ், பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்கவுரையாளர் என்று காட்டுகிறார்கள். மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார். இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலையில் அவரைப் தொடர்ந்தவர். இதே மாற்குதான் என்று ஏற்றுக்கொள்கின்றனர். பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்கு" என்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
மாற்கு, அலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர். இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார். இவரது உடல் 830 ஆம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றுப்படுகின்றார். சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு 1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார்.
எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர், நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தா" என்ற சொல் இவருக்கே உரியது. புதிதாக மனந்திரும்பிய உரோமைப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம். என்று வரலாறு கூறுகின்றது. ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள். கோப்த்து, பிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித மாற்கு நற்செய்தியை எழுதி, உம்மை பற்றி இம்மண்ணிலுள்ள மக்களுக்கு அறிவித்தார். புனித மாற்கு நற்செய்தியினை நாங்களும், எங்களின் வாழ்க்கையில் ஏற்று, வார்த்தையை வாழ்வாக்கிட உம் அருள்தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித.கிறிஸ்டோபர் (St.Christopher)
மறைசாட்சி, வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாவலர் இவருக்கு ரெப்ரோபூஸ் (Reprobus) என்ற பெயரும் உண்டு. பல மக்களை மனமாற்றியதால், இவரை டேசியூஸ் அரசன் (Decius) கொல்ல ஆணையிட்டான். இவர் வழித்துணை பாதுகாவலராக போற்றப்படுகின்றார். அதற
்கு ஒரு வரலாறு உண்டு. 

ஒருநாள் இவர் ஆற்றைக் கடக்கும்போது, ஒரு சிறு பிள்ளை வந்து என்னையும் தூக்கி, கரையை கடக்க உதவுங்கள் என்றது. இவரும் அக்குழந்தையே தோளில் சுமந்துகொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் குழந்தை கனக்க ஆரம்பித்தது. அவரால் வலியை பொறுக்கமுடியவில்லை. இருந்தும் கீழே விட்டுவிடாமல் கரையை கடந்தார். இறக்கியவுடன் அக்குழந்தை "நான் தான் கிறிஸ்து" என்று சொல்லி மறைந்தது. 

நீண்ட பயணம் செய்பவர், இவரிடம் ஜெபித்த போது பல நன்மைகளை பெற்றுள்ளனர். வயலில் வேலை செய்பவர்களூம் தண்ணீர் வேண்டி ஜெபித்த போது மழையை பெற்றுள்ளனர். ஐரோப்பாவில் இவரின் பக்தி அதிகமாக பரவியுள்ளது. 
செபம்: என்றும் வாழ்பவரே எம் இறைவா! இவ்வுலகில் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றது. புனித கிறிஸ்டோபரின் வழியாக நீரே பாதுகாப்பான பயணத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX




No comments: