10/30/2018

திருக்காட்சியாளர் அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ் Alfons Rodriquez
இவர் ஓர் திருமணமானவர். இவரின் மனைவியும், பிள்ளைகளும் இறந்தபின்னர், இயேசு சபையில் சேர்ந்தார். அதன்பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் மறைப்பணியாற்றினார். பின்னர் இவர், தான் தங்கியிரு
ந்த துறவற இல்லத்தில், வாயில்காப்பாளராக பணியாற்றினார். அச்சமயத்தில் பலமுறை திருக்காட்சியைக் கண்டார். இவர் மிக ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். எப்போதும் கீழ்படிதலுடன் இருந்தார். இவர் தான் பெற்ற திருக்காட்சிகளில் சிலவற்றை கடிதமாகவும் எழுதியுள்ளார்.
செபம்:
சமாதானம் அருள்பவரே எம் கடவுளே! திருமணமான ஒவ்வொரு தம்பதியினரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தங்களின் குடும்ப வாழ்வில் வரும் ஒவ்வொரு துன்பங்களையும், பொறுமையுடன் ஏற்று கொள்ளத் திடமான மனதைத் தாரும். தங்கள் பிள்ளைகளின் நலனை கருதி வாழ, நல் உள்ளம் தாரும். ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பத்தைப்போல வாழ உம் அருள் தந்து, வழிநடத்திட வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ரேகன்ஸ்பூர்க் ஆயர் வோல்ஃப்காங்க் Wolfgang von Regensburg 
பாதுகாவல்: ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டம், வீட்டு வேலை செய்பவர்கள், கப்பலோட்டிகள், வலிப்பு நோயிலிருந்து 


இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் தான் படிக்கும்போது ஹென்றி என்பவரின் நண்பரானார். இவரே 956 ஆம் ஆண்டில் டிரியரில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால் அவரின் அழைப்பை ஏற்று டிரியரிலுள்ள பேராலயப்பள்ளிக்கு 964 ல் பேராசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில்தான், தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் துறவற இல்லம் நோக்கி சென்றார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்பூர்க் ஆயர் உல்ரிஷ் (Ulrich) அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

பின்னர் இவர் ஆஸ்திரியா சென்று நற்செய்தியை பறைசாற்றினார். இவரின் மகத்துவமிக்க மறைப்பணி பாசாவ் ஆயராக (Passau) இருந்தவரை கவரவே, அவரை ரேகன்ஸ்பூர்கில் ஆயரில் பொறுப்பை ஏற்கும்படி கூறினார். இச்செய்தியை கேட்டவுடன் வோல்ஃப்காங்க் மிக அதிகமாக பயமுற்று, நோய்வாய்பட்டார். ஆனால் இறையருளால் மீண்டும் நலம்பெற்றார். இவ்வற்புதத்தை அறிந்த அப்போதைய அரசர் 2 ஆம் ஓட்டோ (Otto II) வோல்ஃப்காங்க் 972 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க் ஆயராக அறிவித்தார். இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண்துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர். இவர் ரேகன்ஸ்பூர்கிலிருந்து ஆஸ்திரியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தார். 

இவரின் உடல் ரேகன்ஸ்பூர்க்கில் எம்மராம் (St.Emmeram) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் புதைக்கப்பட்டது. பிறகு இவரின் கல்லறைமேல் கெபி ஒன்றும் கட்டப்பட்டது. இக்கெபி இன்று மக்களால் புனிதத்தலமாக கருதப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது. 
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்றைய நாளில் தங்களின் நாம விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள சுகம் தந்து காத்தருளும். உமது ஆவியின் அருள்கொடைகளால் நிரப்பி, உமது கண்ணின் கருவிழிக்குள் வைத்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


புனித வின்சென்ட் தெ பால் St.Vincent de Paul, Priest and Founder 
இவர் ஓர் ஏழ்மையான கிராமத்தில் ஏழைப் பெற்றோர்களின் மகனாக பிறந்தார். பிரான்சிஸ்கன் சபையை சார்ந்த குருக்களின் பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் மிகவும் நன்றாக படித்ததால், பணம் எதுவும் பெற
ாமல், குருக்கள் இவரை படிக்க வைத்தனர். இதனால் தனது பெற்றோரின் சுமையை சிறிதளவு நீக்கினார். 1596 ஆம் ஆண்டு தூலூஸ் (Toulouse) என்ற நகரிலிருந்த பல்கலைக்கழகத்தில் தனது இறையியல் படிப்பை கற்கசென்றார். படிப்பை முடிந்ததும் 1600 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பிறகு 1605 ஆம் ஆண்டு தூனிஸிருந்து (Tunis) அடிமைகளாக கடத்திக் கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். அப்போது இவரும் அடிமையாக பிடித்துக்கொண்டு போகப்பட்டார். இரண்டு ஆண்டுகள் வின்செண்ட் அம்மக்களின் பிடியிலிருந்தார். பின்னர் இம்மானுவேல் டி கோண்டி(Emmanuel de Gondy) என்பவரிடமிருந்து, கடிதம் வரவே, அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் பிரான்சு நாட்டிற்கு திரும்பினார். 

1617 ஆம் ஆண்டு பிரான்சில் தனது மறைபரப்புப்பணியை தொடர்ந்தார். 1625 ஆம் ஆண்டு மிஷன்(Mission) அல்லது லாசரீஸ்ட்(Lazarists) என்ற பெயரில் சபையை நிறுவினார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கென்ற நோக்கத்தில், அவர் இச்சபையை நிறுவினார். பிறகு 1633 ஆம் ஆண்டில் மீண்டும் புனித லூயிஸ் தெ மரியாக் என்ற அம்மையாரின் ஒத்துழைப்புடன் "பிறரன்பு செவிலியர்" என்னும் துறவற சபையையும் தொடங்கினார். இச்சபைகளுக்கு தனது பள்ளி நண்பர்கள் முதல் ஏராளமானோரின் உதவியுடன் பல சட்டதிட்டங்கலை எழுதி, சபைகளை விரிவுபடுத்தி, ஏழைமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சபைகளை வளர்த்தெடுத்தார். ஏராளமான ஏழை மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டினார். ஏழை மாணவர்கல் பலர் கல்வியை கற்றனர். அவர் தொடங்கிய பணியானது, இன்றும் உலகின் எல்லாப்பகுதியிலும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. 
செபம்:
இரக்கமே உருவான இறைவா! ஏழை எளிய மக்கள் வாழ்வு பெறவேண்டும் என்பதற்காகவே சபையைத் தொடங்கி புனித வின்சென்ட் தெ பால் அரும்பணியாற்றினார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டார். அதைப் பின்பற்றி நாங்களும் ஏழை மக்களுக்கும், எளியோர்க்கும் உதவும் மனதை தந்தருளும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கோஸ்மாஸ், தமியான் St. Cosmas and Damian - மறைசாட்சியர் & மருத்துவர்கள் 
பாதுகாவல்: அறுவை சிகிச்சை, மருத்துவர்கள், முடி திருத்துவோர், கால்நடை மருத்துவர்கள் 


கோஸ்மாஸ், தமியான் இவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரர்கள். இருவரும் அறிவியலும், மருத்துவமும் பயின்றவர்கள். இவர்கள் பணி செய்தபோதும், மக்களை குணப்படுத்தியபோதும், சிறிதளவு பணம் கூட பெறாமல் பணியாற்றினர். சிலிசியாவிலுள்ள(Cilicia) எகாயா(Egaea) என்ற ஊரில் தொண்டாற்றும்போது, மக்களிடையே சிறப்பான பணியாற்றினர். அம்மக்களிடையே வாழ்வதில் இவர்கள் பெரும்மகிழ்ச்சியடைந்தனர். இவர்கள் இருவரும் ஆற்றிய சேவையினால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர். இதனால் பொறாமைக்கொண்ட தியோக்ளேசியன்(Diocletian) என்பவன் இருவரையும் பிடித்துச் சென்று துன்புறுத்தினான். பின்னர் சிலிசியா நாட்டு ஆளுநர் லிசியஸ்(Lysias) என்பவனிடம் இருவரையும் ஒப்படைத்தான். அங்கு அவன் இருவரையும் சிறையிலடைத்து, துன்புறுத்தி, இறுதியில் இருவரின் தலையையும் வெட்டி கொன்றான். 

இவர்களின் பெயரால் உரோமையில் பல ஆலயங்கள் உள்ளது. திருச்சபையில் இவர்களின் பெயரால் பல மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது மிகத் தொன்மை வாய்ந்த நினைவுக்குறிப்புகளில், இவர்களின் கல்லறை சிரியாவில் சைர் என்னுமிடத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அங்கு இவர்களின் பெயரால் பேராலயமும் கட்டப்பட்டுள்ளது. இப்புனிதர்களின் பக்தி அங்கிருந்து உரோம் வந்தடைந்தது. பின்னர் தான் திருச்சபை முழுவதும் பரவியது என்றும் கூறப்படுகின்றது.
செபம்:
பரிவன்புமிக்க தந்தையே! புனித கோஸ்மாஸ், தமியான் என்றழைக்கப்படும் மறைசாட்சியரின் நினைவுநாளை கொண்டாடுவதின் வழியாக, உமது பேராற்றலை உணர்கின்றோம். உமது பராமரிப்பினால் அவர்களை மாட்சியில் உயர்த்தினீர். அவர்களது பாதுகாப்பு மிக்க இறைவேண்டல் எங்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

திருத்தூதர் மத்தேயு, நற்செய்தியாளர் St. Matthew, Apostle and Evangelist
இவர் சுங்கத்துறையில் பணி செய்தவர். நற்செய்தியை எழுதியவர். இயேசுவால் சீடராக அழைக்கப்பட்டவர். இவர் கீழை நாடுகளில் திருமறையை போதித்ததாக கூறப்படுகின்றது. மத்தேயு என்ற பெயருக்கு, யாவேயி
ன் அருங்கொடை என்பது பொருள். மத்தேயு, இயேசு கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கையை எழுதி நற்செய்தியாக வடிவமைத்தார். இவர் அல்பேயுவின் மகன். 

மத்தேயு தனது திருத்தூதர் பணியை பாலஸ்தீனாவில் மட்டும் செய்ததாக சொல்லப்படுகின்றது. இவரின் வாழ்வை பற்றிய விவரங்கள் அதிகம் கொடுக்கப்படவில்லை. இவர் அமைதியான முறையில் இறந்து, மறைசாட்சிகளுக்குரிய கிரீடத்தை பெற்றுள்ளார். 
செபம்: எம் தலைவராகிய ஆண்டவரே! வரி தண்டுபவராகிய மத்தேயுவை சொல்லற்கரிய உம் இரக்கத்தால் திருத்தூதராக தேர்ந்தெடுத்தீர். அவரது பரிந்துரையாலும், முன்மாதிரியாலும், நாங்கள் எப்போதும் உமது அழைத்தலுக்கு பதிலுரைத்து, உம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ துணைபுரியும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித எஸ்தாக்கியுஸ் St. Eustachius
எஸ்தாக்கியுஸ் என்பது ஓர் கிரேக்கப்பெயர். இவர் மனமாற்றம் பெறுவதற்கு முன் பிளாசிடஸ் Placidus என்றழைக்கப்பெற்றார். உரோமில் அதிரியான் Adrian ஆட்சி செய்த காலத்தில் தேயோபிஷ்டா Theopista மற்றும் அவரின் மகன்கள் அகாபியஸ்(Agapius), தேயோபிஷ்டஸ்(Theopistus) என்பவர்களுடன் சேர்த்து துன்பப்படுத்தப்பட்டார். எஸ்தாக்கியுஸ் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி மறைப்பணியை ஆற்றியுள்ளார். இவர் தனது 12 வயதிலிருந்து திருச்சபைக்காக உழைத்தார். 

இவர் இறந்தபிறகு இவரின் உடலிலிருந்த எலும்புகள் அனைத்தையும் ஒன்றாக் சேர்த்து 1567 ல் பாரிஸ் நாட்டில் புனித எஸ்தாக்கியுஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது, இவர் நீதியோடும், நேர்மையோடு வாழ்ந்தார். மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். சாதி, மதம் பார்க்காமல் பணியாற்றினார். மனசாட்சிக்கு மட்டுமே செவிசாய்த்தார். இவருக்கு தீங்கு செய்தவர்களிடமும் அன்பாக இருந்தார். அவர்களை மன்னித்து, அவர்களிடத்தில் அளவில்லா அன்பு காட்டி, வாழ்வையும் மாற்றினார். பிறரை பாராட்டுவதிலும் எப்போதும் முதலிடம் வகித்தார். 

மற்றவர்களின் பலவீனங்கலை அறிந்து, அவைகளிலிருந்து வெளியேற உதவினார். இவரின் நல்ல குணங்கலை அறிந்த எதிரிகள் , சமுதாயத்தில் இவரின் பெயரை கெடுக்க திட்டமிட்டனர். கொடூரமான பழிகளை அவரின் மேல் சுமத்தினர். பல அநீதிகளை செய்ததாக குற்றம் சாட்டினர். அப்போதும் கூட இவர் பொறுமையை கடைபிடித்து, கடவுளை மட்டுமே தன் வாழ்வின் மையமாக கொண்டு செயல்பட்டார். எதிரிகளின் இதயங்களிலும், ஈரத்தை ஏற்படுத்தி இறையுறவை வளர்த்து, மனமாற்றினார். 
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! நற்செய்தியின் மதிப்பிடுகளின்படி தன் வாழ்வை அமைத்து வாழ்ந்த புனித எஸ்தாக்கியுஸை நினைத்து உம்மை போற்றுகின்றோம். அவர் வாழ்ந்து விட்டு சென்ற முன் மாதிரியான அவரின் வாழ்வை நாங்களும் கற்றுக்கொண்டு அவரை எம் வாழ்வில் பிரதிபலிக்க நீர் அருள் தர வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ஜோசப் கப்பர் Joseph of Cuper குரு, திருக்காட்சியாளர்
இவரின் பெற்றோர் பிரான்செஸ்கா பானரா Francesca Panara மற்றும் பெலீஸ் டேசா Felice Desa என்பவர்கள் ஆவார். இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தந்தை இறந்துவிட்டார். தந்தை ஏற்படுத்திய கடனை இவரின் தாயால் அடைக்கமுடியவில்லை. இதனால் தாயிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கடன்காரர்கள் அபகரித்து சென்றார்கள். இதனால் இவரின் தாய், மகன் ஜோசப்பை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். இளம் வயதிலிருந்தே ஜோசப்பிற்கு, தாய் ஞானப்பாலை ஊட்டி வளர்த்தார். இறைபக்தியில் வளர்ந்த ஜோசப், சிறுவயதிலிருந்தே இறைதரிசனங்களை பெற்றார். 

ஜோசப் பல நல்ல குணங்களை பெற்று வளர்ந்தார். இருப்பினும் கோபம் என்னும் குணமும் இவரோடு வளர்ந்தது. இதனால் துன்பங்களுக்கும் ஆளானார். இவரும் இவரின் தாயும் துன்பப்படுவதை அறிந்த இவரின் மாமா ஜோசப்பை தன்னுடன் அழைத்து சென்றார். இவர் செய்த ஷூமேக்கர் தொழிலை ஜோசப்பிற்கும் கற்றுக்கொடுத்தார். அத்தொழிலை செய்தபோதும், ஜோசப்பின் மனம் குருவாக வேண்டுமென்ற ஆசையை கொண்டிருந்தது. இதனால் 1620 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையினர் நடத்திய சிறுவர்களின் பள்ளியில் சேர்ந்து படித்தார். ஆனால் போதுமான கல்வியை அவரால் கற்கமுடியவில்லை. இருப்பினும் குருவாகும் ஆசையை விடாமல் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அங்கு வாழ்ந்தபோது, பல பயிற்சிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் சில தகுதிகள் அவரிடம் இல்லையென்பதை உணர்ந்த அச்சபையினர் அவரை வெளியில் அனுப்பினர். தன் வீட்டிற்கு சென்று வாழ்ந்தபோது 1625 ஆம் ஆண்டு, அவர் வாழ்ந்த மறைமாவட்டத்திலிருந்த குருத்துவ இல்லம் சென்று, தன் ஆசையை அம்மறைமாவட்ட குருக்களிடம் தெரிவித்து குருமடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். எளிமையிலும், பக்தியிலும் வாழ்ந்து 1628 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார். 

பிறகு மடோனாடெல்லா கிராசியா Madonna della Grazia என்ற ஆலயத்தில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு ஜோசப் பலமுறை கடவுளின் காட்சிகளை பெற்றார். பல மணிநேரங்கள் தொடர்ந்து தன்னை மறந்து செபித்தார். இவர் திருப்பலி நிறைவேற்றிய ஒவ்வொரு நாளும் மக்கள் இவரின் புனிதத்துவத்தை உணர்ந்தனர். இவர் மனிதர்களை பார்த்தவுடனே அவர்களின் மனதில் உள்ளவற்றை அப்படியே கூறுவார். இதனால் சில நேரங்களில் இவர் கட்டுக்கதைகளைக் கட்டுகிறார் என்று கூறி சிறைப்பிடித்து கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் பிரான்சிஸ்கன் சிறுவர் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். 1639-1653 வரை அவ்வில்லத்தில் பணியாற்றினார். அங்கும் பலமுறை காட்சிகளை கண்டார். 1653-1657 வரை வாரத்திற்கு இருமுறை மட்டுமே உணவு உட்கொண்டு கடுமையான தவ வாழ்வை கடைபிடித்தார். இவ்வாறே 35 ஆண்டுகள் வாழ்ந்தார். 
செபம்:
அன்பான இறைவா! உம்மீது கொண்ட அன்பால், கடுமையான தவம் புரிந்து உம்மிடம் இருந்து பலமுறை காட்சிகளை பெற்று வாழ்ந்த புனித ஜோசப்பைப் போல, நாங்களும் உம்மை தரிசித்து, உம்மைக்காணும் பேற்றைப் பெற, நீர் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ஆயர் இராபர்ட் பெல்லார்மின், மறைவல்லுநர் St. Robert Bellarmine 
இவர் தமது 18 ஆம் வயதில் உரோம் நகரிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். 1559 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டிற்கு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்டார். சிறந்த முறையில் கல்வி கற்றபின் மீண்டும் உரோம் திரும்பினார். அங்கிருந்த இயேசு சபையில் பணியாற்றி குருப்பட்டம் பெற்று, சிறந்த மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க திருச்சபையை பாதுகாக்கும் பொருட்டு, புகழ் பெற்ற விவாதங்களை நடத்தினார். பிறகு உரோமன் கல்லூரிகளில் இறையியல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பல நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் இன்று ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 

பின்னர் இவர் இயேசு சபையில் பல உயர்பதவிகளைப் பெற்று, அனைத்தையும் சிறப்பாக ஆற்றினார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அவர்கள், இராபர்ட் பெல்லார்மினை கர்தினாலாக உயர்த்தினார். இவர் காப்புவா என்ற மறைமாவட்டத்தில் ஆயர் பொறுப்பையும் ஏற்றார். பிறகு 11 ஆம் சிங்கராயர் அவர்களால் உரோம் நகருக்கு சிறந்த ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றது. நாம் அதை முழுமையாக கடவுளின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை இவர் அடிக்கடி கூறுவார். நீதியோடும், நேர்மையோடும் தன்னிடம் ஒப்படைத்த பணியை செய்தார். அக்காலத்தில் எழுந்த பல ஐயப்பாடுகளையும், தெளிவுப்படுத்தி, திருச்சபையின் வளர்ச்சிக்கு துணை நின்றார். திருச்சபையில் இருந்த மறைநூல் வல்லுநர்களில், இவரும் ஓர் சிறந்த மறைவல்லுநர் என்ற பெயரையும் பெற்றார். 
செபம்:
வரங்களை வாரி வழங்குபவரே எம் கடவுளே! திருச்சபையின் நம்பிக்கையை பாதுகாக்க புனித இராபர்ட் பெல்லார்மினை ஏற்படுத்தினீர். உமது வியத்தகு அறிவாற்றலையும், நீதியையும், நேர்மையையும் அவருக்குத் தந்தீர். அவருக்கு நீர் அளித்த கொடைகளை எமக்கும் அளித்து, எம் வழியாக உமது திருச்சபையை வளரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Sts. Cornelius and Cyprian - (d. 253)
கார்த்தேஜ் நகர் ஆயர் மறைசாட்சி சிப்ரியான், ஆயர், St.Cyprian
இவர் ஓர் கிறிஸ்தவர் அல்லாதவரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலிருந்தே கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமென்று ஆசைக்கொண்டு, குடும்பத்தினரின் உதவியுடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். திருவருட்சாதனங்களை பெற்று, திருமறையைப் பற்றி நன்கு அறிந்தார். பின்னர் தான் பிறந்த ஊரிலே இருந்த குருமடத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சிறந்த மறைபரப்புப் பணியாளராக பணியாற்றினார். தன் குடும்பத்திலிருந்து இவருக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினர். அவற்றையெல்லாம் விற்று, வேறுபாடு பார்க்காமல் பணியாற்றினார். 

இவர் 249 ஆம் ஆண்டு இவரின் சொந்த மறைமாவட்டத்திற்கே ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பிரச்சனைகள் நிறைந்திருந்தபோதும், திறம்பட தம் பணியை ஆற்றினார். பல அரசர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களிடமும் இறைநம்பிக்கையை வளர்த்து கிறிஸ்துவர்களாக மாற்றினார். 

இச்செயல்களை கண்ட பல கிறித்தவரல்லாதவர்கள் சிப்ரியானின் செயல்களை எதிர்த்தனர். கிறிஸ்துவர்களை பலவிதங்களில் வதைத்துக்கொன்றனர். சில மக்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து பிரிந்து புறவின சபையில் சேர்ந்தனர். அவர்களின் பயத்தைப் பார்த்து, சிப்ரியான் கிறிஸ்துவர்களாக வாழ தைரியமூட்டி கிறிஸ்துவை பற்றிக்கொள்ள இன்னும் சிறப்பாக குரல் கொடுத்து பணியாற்றினார். இதனால் டீசியன் (Disiyan) என்ற மன்னன் ஆத்திரமடைந்து, சிப்ரியானை சிங்கங்களின் வாயிலிட்டு கொல்லும்படி கட்டளையிட்டான். அதை அறிந்த சிப்ரியான் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பித்து சென்றான். 

அப்போது அம்மறைமாநிலத்தில் ஆயர் இல்லாமல் போனது. இதனை அறிந்த நோவெற்றஸ் (Nowetras) என்பவன் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, திருச்சபையில் இருந்துக்கொண்டே, திருச்சபைக்கு எதிராக செயல்பட்டான். உரோம் நகர் சென்று, அங்கும் தவறான வதந்திகளை பரப்பினான். இதையறிந்த சிப்ரியான் மனங்கலங்கினார். மீண்டும் கார்த்தேஜ் வந்தடைந்தார். அப்போது சில கூட்டங்களை கூட்டி திருச்சபையில் சில நிலையான தீர்மானங்களை கொண்டுவந்தார். 257 ஆம் ஆண்டு மீண்டும் சிலைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை சிப்ரியான் எதிர்த்தார். இதனால் பட்டேனஸ்(Patenas) என்ற ஆளுநர் ஒருவரால் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் இவர் கிறிஸ்துவ மக்களுக்காக மட்டுமே பரிந்து பேசினார். அதனால் மீண்டும் வலேரியன் என்பவனால் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, கடுமையான தண்டனையை அளித்தார். பல துன்பங்களை அனுபவித்தார் ஆயர். அப்போதும் கூட ஆப்ரிக்கா மண்ணில் வாழும் கிறிஸ்துவர்களுக்காக பரிந்து பேசி, குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தவண்ணமாய் இருந்தார். இதனால் தலை வெட்டப்பட்டு இறந்தார். 
செபம்:
எல்லாம் வல்லவரே! புனித சிப்ரியான் உமது மாட்சிக்காக, மறைசாட்சியாக இறந்தார். அவரின் பக்தியை நாங்கள் கடைபிடித்து வாழ எமக்கு உதவி செய்தருளும். உம்மீது நம்பிக்கைக்கொண்டு, விசுவாச வாழ்வில் வளர்ந்து, என்றும் உம்மை உம் வாழ்வில் பறைசாற்றி வாழ, உமதருளை பொழிந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
 "அனைத்திற்கும், இறைவனுக்குப் புகழ்" (St John Chrysostom) 
அந்தியோக்கு நகரில் அரசாண்ட Theodosius என்பவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை மேற்கொண்டனர். மன்னர் தனக்கென நிறுவியிருந்த சிலைகளை மக்கள் தகர்த்தனர். கோபமடைந்த மன்னர், மக்கள் மீது தன் படையை ஏவினார்.
அவ்வேளையில் அந்தியோக்கு நகரில் அருள்பணியாற்றிவந்த ஜான் கிரிசோஸ்தம் (St John Chrysostom) அவர்கள், மக்களுக்கு தவக்கால மறையுரைகள் வழங்கினார். அவர் வழங்கிய மறையுரைகளைக் கேட்ட மக்கள் மனம் மாறி, கிறிஸ்தவ மறையைத் தழுவியதோடு, மன்னருக்கு எதிரான கிளர்ச்சியையும் கைவிட்டனர். எனவே, மன்னரும் மக்கள் மீது தான் ஏவியிருந்த படையினரைத் திரும்பப் பெற்றார்.
397ம் ஆண்டு, கான்ஸ்டான்டிநோபிளின் பேராயராகப் பொறுப்பேற்ற கிரிசோஸ்தம் அவர்கள், அக்காலத்தில் பேராயர்கள், உயர்குடி மக்களுக்கு வழங்கிவந்த ஆடம்பர விருந்துகளை வழங்க மறுத்தார். எனவே, செல்வந்தர்களின் கோபத்திற்கு இலக்கானார்; ஆனால், எளிய மக்களின் மதிப்பைப் பெற்றார்.
உயர்குடியைச் சேரந்த பெண்கள், தாறுமாறாக உடையணிந்து வலம் வந்ததை, பேராயர் கிரிசோஸ்தம் அவர்கள் கண்டனம் செய்தார். பேராயர் தன்னைப்பற்றியே இவ்வாறு பேசுகிறார் என்று, மன்னர் Arcadiusன் மனைவி, Aelia Eudoxia எண்ணியதால், கிரிசோஸ்தம் அவர்களை நாடுகடத்த மன்னரைத் தூண்டினார். மன்னரும் அவ்வாறே செய்தார். பேராயர் நாடுகடத்தப்பட்டதை அறிந்த எளிய மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், மன்னர் Arcadius, பேராயரை மீண்டும் வரவழைத்தார்.
தன் மறைமாவட்டத்திற்கு திரும்பிவந்த பேராயர் கிரிசோஸ்தம் அவர்கள், பேராயலத்திற்கு அருகே அரசி Eudoxiaவுக்கு சிலையொன்று நிறுவப்பட்டதை வன்மையாகக் கண்டித்தார். எனவே, அவர் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில், 407ம் ஆண்டு, செப்டம்பர் 14ம் தேதியன்று, Cormana என்ற இடத்தில் பேராயர் கிரிசோஸ்தம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். "அனைத்திற்கும், இறைவனுக்குப் புகழ்" என்பன, புனித ஜான் கிரிசோஸ்தம் அவர்கள் தன் மரணத்திற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளாக அமைந்தன.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித தாமஸ் (St. Thomas of Villanova) - ஆயர் :

பிறப்பு : 1488 வில்லநோவா, ஸ்பெயின் (Villanova, Spain)

இறப்பு : செப்டம்பர் 8, 1555 வலென்சியா, ஸ்பெயின் (Valencia, Spain)

புனிதர் பட்டம் : நவம்பர் 1, 1658 திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் - Pope Alexander VII

பாதுகாவல் : வில்லநோவா பல்கலைகழகம் - (Villanova University)

வில்லநோவா புனித தாமஸ், அகுஸ்தினார் துறவற சபையைச் சேர்ந்த ஒரு ஸ்பேனிஷ் துறவியாவார். அவருடைய காலத்தில், குறிப்பிடத்தக்க ஒரு போதகரும், சந்நியாசம் மற்றும் மத எழுத்தாளரும் ஆவார். ஏழைகளின்பால் அன்பும் கருணையும் கொண்ட ஒரு பேராயரும் ஆவார்.

'தோமஸ் கார்சியா y மார்ட்டிநெஸ்' (Tomás García y Martínez) எனும் இயற்பெயர் கொண்ட இவருடைய தந்தை, ஒரு தானியங்களை அரைப்பவர் ஆவார். அவர் ஏழைகளுக்கு உணவு மற்றும் தானியங்களை தினமும் கொடுக்கும் வழக்கம் கொண்டவராயிருந்தார்.

தமது பதினைந்தாம் வயதில், களை மற்றும் இறையியல் கற்பதற்காக அல்காலா பல்கழையில் (University of Alcalá) சேர்ந்தார். தமது கல்வியை முடித்த தாமஸ், அங்கேயே ஒரு பேராசிரியராக பணி புரிந்தார். கலை, தர்க்கம், மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களைப் போதித்த தாமஸ், தொடர்ச்சியான மனநிலை இல்லாமலும் குறைந்த ஞாபக சக்தியும் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாகவே, 1516ல், புனித அகுஸ்தினார் துறவற சபையில் இணைந்தார். 1518ல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

அன்பொழுக இனிமையாக அருட்போதனை செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார். "இறைவனின் அன்பு" என்னும் தலையங்கத்திலேயே பெரும்பாலான சொற்பொழிவுகளை தயாரித்து நிகழ்த்தினார். அன்னை கன்னி மரியாளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டிருந்தார்.

1533ல், புனித அகுஸ்தினார் துறவற மடத்திலிருந்து மெக்சிக்கோ (Mexico) நாட்டுக்கு அனுப்பப்பட்ட தாமஸ், அங்கே அரசர் ஐந்தாம் சார்லஸ் (Charles V) அவர்களால் கிரனடா உயர் மறை மாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ஆனால், தாமஸ் அதை ஏற்க மறுத்துவிட்டார். 1544ல் மீண்டும் அவர் 'வலேன்சியா'வின் (Valencia) பேராயராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து மறுத்துவிட்டார்.

தாமஸ் சிக்கனத்துக்கு பெயர் போனவர். அவர், தாம் படுக்க உபயோகித்த பாயை கூட ஏழை ஒருவருக்கு உதவுவதற்காக விற்றுவிட்டார். தாமஸ் "ஏழைகளின் தந்தை" என்று அறியப்பட்டார். அனாதைகள், ஏழைப்பெண்கள், ஆதரவற்றவர்கள் மீது அவர் கொண்ட தொடர்ந்த அன்பும் பற்றும் அளவற்றது. உறைவிட பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகள் பலவற்றை அவர் கட்டி உருவாக்கினார்.

தமது 67வது வயதில் வலென்சியா'வில் (Valencia) மரணமடைந்த தாமசின் உடல் அங்கேயுள்ள பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டது
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித நிக்கோலஸ் ✠ (St. Nicholas of Tolentino)

பிறப்பு : 1246 இத்தாலி


இறப்பு : செப்டம்பர் 10, 1305

புனிதர் பட்டம் : ஜூன் 5, 1446 திருத்தந்தை நான்காம் யூஜின் Pope Eugene IV

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 10

பாதுகாவல் : மிருகங்கள், குழந்தைகள், படகோட்டிகள், பிலிப்பைன்ஸ், புனித ஆன்மாக்கள், நோயுற்ற மிருகங்கள்.

டோலென்ட்டினோவின் நிக்கோலஸ் ஒரு ஆன்ம பலம் கொண்டவரும், இத்தாலிய புனிதரும் ஆவார். புனித ஆன்மாக்களின் பாதுகாவலர் என்று அறியப்பட்டவர்.

18 வயதில் துறவறம் பெற்ற நிக்கோலஸ், ஏழு வருடங்கள் கழித்தே குருத்துவம் பெற்றார். மத போதகம் செய்வதிலும் பாவ மன்னிப்பு வழங்குவதிலும் கீர்த்தி பெற்றார்.

1274ல், தமது பிறந்த ஊருக்கு அருகிலுள்ள டோலேன்ட்டினோ'வுக்கு அனுப்பப்பட்டார். அங்கே இரு பிரிவினரிடையே கலவரம் நடந்து கொண்டிருந்தது. ஆயருக்கு பக்கபலமாக 'கேல்ப்ஸ்' (Guelphs) எனும் பிரிவினரும், ரோமப் பேரரசருக்கு ஆதரவாக 'கிபெல்லின்ஸ்' (Ghibellines) எனும் பிரிவினரும் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர் சமாதான தூதுவராகப் பணி புரிந்தார்.

ஏழைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தவர்க்கும் போதனை செய்தார். நோயுற்றோருக்காக இறைவனின் புனித அன்னையிடம் ஜெபித்து ரொட்டித் துண்டுகளை வழங்கி அவர்களை குணமாக்கினார் என்று கூறப்படுவதுண்டு. அவருக்கு சம்மனசுக்களின் காட்சிகள் காணக் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. தொடர்ந்த நோன்புகள் நோற்கும் வழக்கம் கொண்ட நிக்கோலஸ், ஒருமுறை ஒரு வாரத்துக்கும் அதிகமாக நோன்பிருந்த வேளையில், அர்ச்சிச்ட்ட கன்னி மரியாளும் புனித அகுஸ்தினாரும் காட்சியளித்து, சிலுவை அடையாளமிட்ட ரொட்டியை தண்ணீரில் நனைத்து உண்ணுமாறு கூறினர். நோன்புகளின் காரணமாக மிகவும் களைத்தும் பலவீனமாகவும் காணப்பட்ட நிக்கோலஸ், சிலுவை அடையாளமிட்ட ரொட்டிகளை தண்ணீரில் நனைத்து உண்டவுடன் புத்துணர்ச்சியும் புதிய பலமும் பெற்றார்.

ஏழைகளுக்கு உதவுவதிலும், சிறைச் சாலைகளுக்கு சென்று கைதிகளைக் கண்டு அவர்களுக்கு போதனைகள் செய்வதிலும் நோயுற்றோருக்காக கன்னி மரியாளிடம் ஜெபித்து ரொட்டி வழங்கி அவர்களை குணமாக்குவதிலும் வெற்றி கண்டார். அவருடைய இந்த வெற்றிகளுக்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டபோது, தாம் இறைவனின் ஒரு கருவியே என்றார்.

செப்டம்பர் 10, 1305ல் மரணமடைந்த நிக்கோலசின் உடல் டோலென்ட்டினோ (Tolentino) நகரிலுள்ள "புனித நிக்கோலஸ் திருத்தலத்தில்" பாதுகாக்கப்படுகின்றது.


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

 "அடிமைகளின் அடிமை" – புனித பீட்டர் கிளேவர் 
தென் அமெரிக்காவின் கார்த்தஜேனா துறைமுகத்தை நோக்கி கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. துறைமுகத்தில் பல வர்த்தகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வாங்க வந்திருந்த பொருள்கள்... மனிதர்கள். 
ஆம், அந்தக் கப்பல் ஆப
்ரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மனிதர்களை, மிருகங்களைப் போல் அடைத்துக் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களில் பலர் கடல் பயணத்தில் உயிர் துறந்தனர். மீதம் இருந்த அடிமைகள், துறைமுகத்தில் ஏலத்தில் விற்கப்பட்டனர். 
அந்தச் சூழலில் 30 வயது இளம் அருள் பணியாளர் அந்த அடிமைகள் நடுவே சென்று, அவர்களுக்கு உணவும், நீரும் வழங்கினார். காயமுற்று, நோயுற்று இருந்தவர்களுக்கு மருந்துகள் வழங்கினார். அங்கிருந்த அடிமை வர்த்தகர்கள் அவரை வெறுப்புடன் வசைபாடினாலும், அவர் தன் பணியை நிறுத்தவில்லை.
அந்த இளம் அருள் பணியாளரின் பெயர் பீட்டர் கிளேவர். ஸ்பெயின் நாட்டில் 1581ம் ஆண்டு பிறந்த பீட்டர், இயேசு சபையில் இணைந்து, மயோர்க்கா எனுமிடத்தில் இருந்த ஒரு கல்லூரியில் பயின்றார். அந்தக் கல்லூரியில் வாயில் காக்கும் பணியைச் செய்துவந்த அருள் சகோதரர் அல்போன்ஸ் ரொட்ரிகுவெஸ் அவர்கள், இளைஞன் பீட்டரின் ஆன்மீக வழிகாட்டியாக இருந்து, மறைபரப்புப் பணி நாடுகளுக்குச் செல்லும்படி அவரைத் தூண்டினார்.
தன் 29 வது வயதில் தென் அமெரிக்கா சென்று அடிமைகள் மத்தியில் தன் பணிகளைத் துவங்கினார் பீட்டர். இவர் தன் இறுதி அர்ப்பணத்தை வழங்கியபோது, இயேசு சபையில் பொதுவாக வழங்கப்படும் ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் என்ற மூன்று வாக்குறுதிகளுடன், "அடிமைகளின் அடிமை" என்ற கூடுதல் வாக்குறுதியையும் இவர் இணைத்தார். 40 ஆண்டுகள் அவர் தொடர்ந்த இப்பணியினால், அடிமைகள் பலர் கிறிஸ்துவை ஏற்கும் வாய்ப்பு பெற்றனர். இவர் தன் பணியில் 3 இலட்சத்திற்கும் அதிகமான அடிமைகளை கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார்.
இவரது வாழ்வின் இறுதி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மிகுந்த நோயுற்று கிடந்தார். அடிமையாய் இருந்து விடுதலை பெற்ற ஒருவரை, இவரைக் கவனித்துக் கொள்ளும்படி இல்லத்தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரோ, பீட்டர் கிளேவர் அவர்களைக் கொடுமைப்படுத்தினார். இருப்பினும், பீட்டர் அவரைக் குறித்து யாரிடமும் புகார் சொல்லாமல் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். 
1654ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி, தன் 73வது வயதில் இறைவனடி சேர்ந்த பீட்டர் கிளேவர் அவர்களையும், அவருக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்து, மறைபரப்புப்பணி நாடுகளுக்குச் செல்லும் ஆவலைத் தூண்டிய அருள் சகோதரர் அல்போன்ஸ் ரொட்ரிகுவெஸ் அவர்களையும் 1888ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் புனிதர்களாக உயர்த்தினார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


September 5 – St. Mother Teresa of Calcutta (1910-1997)
கோன்ச்ஹா ஆக்னெஸ் போஜக்ஸ்யு(Agnes Gonxha Bojaxhiu) என்ற கல்கத்தா தெரேசா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனியாவில், குடும்பத்தில் ஐந்தாவதும், கடைசி குழந்தையுமாகப் பிறந்தவர். ஐந்தரை வயதில், புதுநன
்மை வாங்கியது முதல், ஆன்மாக்கள்மீதான அன்பால் நிறைந்தார். 1928ம் ஆண்டு, அயர்லாந்தில் லொரேத்தோ அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்தார். 1929ம் ஆண்டு இந்தியா சென்றார். 1931ல் முதல் வார்த்தைப்பாடும், 1937ல் இறுதி அர்ப்பணத்தையும் எடுத்தார். இருபது ஆண்டுகள் இந்தியாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1946ம் ஆண்டு, செப்டம்பர் 10ம் தேதி,எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏழைகளிலும் ஏழைகளுக்குப் பணியாற்றும் அழைப்பை இயேசுவிடமிருந்து பெற்றார். கல்கத்தா சேரிகளில் பணியாற்றுவதற்கு, திருஅவையிடமிருந்து 1948ல் அனுமதி பெற்றார். 1950ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, இவரின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை,ஒரு மறைமாவட்ட சபையாக உருவெடுத்தது. 1965ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி, இச்சபை, பாப்பிறை அங்கீகாரம் பெற்ற ஒரு சபையாக மாறியது. அன்பின் மறைப்பணியை விரிவுபடுத்தும் நோக்கத்தில்,1963ல், ஆண்களுக்கென அருள்சகோதரர்கள் சபையைத் தொடங்கினார். 1976ல், அருள்சகோதரிகள் தியானயோக சபையையும், 1979ல் அருள்சகோதரர்கள் தியானயோக சபையையும், 1984ல் பிறரன்பு மறைப்பணியாளர்கள் அருள்பணியாளர் சபையையும், அருள்பணியாளர்க்கு திருநற்கருணை இயக்கத்தையும், தன்னார்வப் பணியாளர்கள் அமைப்பையும் ஆரம்பித்தார் அன்னை தெரேசா.. அவர் இறந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று, இச்சபை 120 நாடுகளில், 594 இல்லங்களில் 3,842 சகோதரிகளைக் கொண்டிருந்தது. அன்னை தெரேசா, தனது ஆன்மீக வாழ்வில் இருளான நேரங்களை அனுபவித்ததையும் விடுத்து, அன்னை மரியாவைப் போன்று, இயேசுவின் அன்பை உலகெங்கும் பரப்ப,எல்லா இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அதனால், இன்று, எல்லாருக்கும், கடவுளின் கனிவு மற்றும், இரக்கமுள்ள அன்பின் மறுஉருவமாகத் திகழ்கிறார். இப்பூமியில் இருளில் வாழ்வோர்க்கு,இன்றும், தொடர்ந்து விண்ணிலிருந்து ஒளியை ஏற்றிக் கொண்டிருக்கிறார் அன்னை தெரேசா.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
திருத்தந்தை பெரிய கிரகோரியார் St.Gregory the Great, Pope and Doctor of the Church – மறைவல்லுநர் - பாதுகாவல்: ஆசிரியர்கள், மாணவர்கள், தொற்று நோயிலிருந்து .

இவர் தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு 
அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். பின்னர் கான்ஸ்டாண்டினோபிளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார். தன் ஆட்சியிலிருந்த சிறைப்பட்ட மக்களை மீட்டார். திருச்சபையில் நேர்மையின்றி, நெறிகெட்ட பதவியிலிருந்த பணியாளர்களையும், குருக்களையும் பணியிலிருந்து நீக்கினார். அப்போது "லம்பர்ட்" என்ற இனத்தை சேர்ந்த அரக்கர்கள் கிறிஸ்துவ மக்களையும், திருச்சபையையும் கடுமையாக தாக்கினார். அவர்களை மிக தைரியத்துடன் கிரகோரியார் அடக்கினார். தன் பதவி காலத்தில் யூத மக்களுக்கு முன்னிடம் கொடுத்தார். அக்காலத்தில் பிளேக் நோய் நாடெங்கும் பரவி வந்ததால், பெருமளவில் அம்மக்களுக்கு உதவினார். அம்மக்களிடையே திருமறையை பரவ செய்து அதை நிலைநாட்டினார். இவர் பல நூல்களை எழுதி அதன் வழியாகவும் திருமறையை வளர்த்தார். 
செபம்:
அன்பான இறைவா! அறிவு, திறமை, பேர், புகழ் என்று அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதவர்போல் வாழ்ந்து உமக்காக மட்டுமே வாழ்ந்த புனித பெரிய கிரகோரியாரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீதியோடும், நேர்மையோடும் ஆட்சி செய்து, உமக்குரியவராக வாழ்ந்த அவரின் முன்மாதிரியை பின்பற்றி நாங்களும் வாழ உமதருள் தாரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXX


No comments: