10/28/2018

October 29 - St. Narcissus of Jerusalem - (d. 215)
எண்பது வயதில் ஆயர் பணியேற்று அசத்தியவர் (St.Narcissus) 
கி.பி.180ம் ஆண்டில், தனது எண்பதாவது வயதில் எருசலேமின் முப்பதாவது ஆயராகப் பொறுப்பேற்றவர் புனித நார்சிசுஸ். பணிக்கு வயது ஒரு தடையல்ல என்பதுபோல் இளமைத் துடிப்புடன் இறைப்பணியைத் தொடர்ந்த இவர், கி.ப
ி.195ம் ஆண்டில், பாலஸ்தீனாவின் செசாரியா ஆயர் தியோஃபிலெஸ் அவர்களுடன் சேர்ந்து, செசாரியாவில் நடந்த ஆயர்கள் அவையில், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமையில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆயர் நார்சிசுஸ் அவர்கள் வாழும்போதே பல புதுமைகள் செய்தவர். மின்விளக்குகள் இல்லாத அக்காலத்தில், ஒரு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாடு தொடங்கவிருந்த நேரத்தில், ஆலய விளக்குகளுக்குப் போதுமான எண்ணெய் இல்லாமல் அணைந்துபோகும் நிலையில் இருந்தன. உடனே இவர் தியாக்கோன்களை அழைத்து அருகிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து விளக்குகளில் ஊற்றச் சொன்னார். பின்னர் அந்தத் தண்ணீர்மீது உருக்கமாகச் செபித்தார். உடனே அந்தத் தண்ணீர் எண்ணெய்யாக மாறி விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன. “புனித குரு” என எல்லாராலும் இவர் போற்றப்பட்டதைக் கண்டு பொறாமையடைந்த மூவர், இவர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தினர். முதலாமவன் அனைவர் முன்னிலையிலும் வந்து, நான் சொல்வதில் உண்மை இல்லையென்றால், கடவுள் என்னை நெருப்பில் சுட்டெரிப்பாராக என்றான். இரண்டாவது ஆள் வந்து, எனது குற்றச்சாட்டுப் பொய்யானால், நான் தொழுநோயால் தாக்கப்படுவேன் என்று சபதமிட்டான். மூன்றாவது ஆள் வந்து நான் பார்வையிழப்பேன் என்று உறுதியாகச் சொன்னான். இது நடந்து ஒரு சில நாள்களிலே ஓர் இரவில் முதல் ஆளின் வீடு தானாகத் தீப்பிடித்து முழுக்குடும்பமும் சாம்பலானது. அடுத்த ஆளும் அவர் கூறியதுபோலவே தொழுநோயால் தாக்கப்பட்டார். இவற்றைக் கண்டு பயந்த மூன்றாவது ஆள், ஆயர் மீது தாங்கள் மூவரும் சுமத்திய குற்றங்கள் அனைத்தும் பொய் என அனைவர் முன்னிலையில் அறிவித்து ஆயரிடம் மன்னிப்பு இறைஞ்சினான். ஆயரும் அவருக்கு மன்னிப்பளித்தார். பின்னர் பாலைநிலம் சென்று தனிமையில் செபத்தில் நாள்களைச் செலவழித்தார். சில காலம் கழித்து ஆயர் நார்சிசுஸ் அவர்கள், எருசலேம் திரும்பி வந்தபோது மக்கள் அவரை மீண்டும் ஆயராக்கினார்கள். ஆனால் முதிர்வயது காரணமாக, புனித அலெக்சாந்தரை துணை ஆயராக நியமித்தார் அவர். புனித வாழ்வு வாழ்ந்த ஆயர் நார்சிசுஸ் அவர்கள், தனது 116வது வயதில் கி.பி.216ம் ஆண்டில் காலமானார். இவரின் விழா அக்டோபர் 29.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
October 28 - Sts. Simon and Jude
திருத்தூதர்கள் சீமோன், யூதா ததேயு 
திருத்தூதர் சீமோன்: பாதுகாவல்: சாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள் 


திருத்தூதர் யூதா ததேயு: பாதுகாவல்: ஆபத்தில் உள்ளவர்கள் 
திருத்தூதர் சீமோன்: திருத்தூதர் பட்டியலில் சீமோனின் பெயர் 11 ஆம் இடத்தில் இடம் பெறுகின்றது. இவர் தீவிரவாதி என்றழைக்கப்பட்டார். மெசபத்தோமியா, சிரியா போன்ற நாடுகளில் திருத்தூதுரைப்பணியை செய்தார். என்று கூறப்படுகின்றது. நற்செய்திப்பணியாற்றும்போது கொலை செய்யப்பட்டார். 

திருத்தூதர் யூதா ததேயு: ததேயு என்று அழைக்கப்பெற்ற யூதா, கடைசி இராவுணவின்போது, ஆண்டவர் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது தன் திருத்தூதருக்கு மட்டும் வெளிப்படுத்துவது ஏன் என்று அவரைக் கேட்ட திருத்தூதர் ஆவார். இவைகளை தவிர வேறு எதுவும் இவர்கள் இருவரைப்பற்றியும் அதிகம் கொடுக்கப்படவில்லை. 
செபம்:
ஆதிமுதல் அந்தம்வரை படைத்து பராமரித்தாளும் பரம பொருளை எம் இறைவா! புனித திருத்தூதர்களின் போதனை வழியாக நாங்கள் உம்மை அறிந்து, ஏற்றுக்கொள்ள செய்தீர். இவர்களின் இறைவேண்டலால் மக்களை உம்மில் நம்பிக்கை கொள்ள செய்தருளும். உம்மீதுள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து இதன் வழியாக உம் திருச்சபையை மேன்மேலும் வளரச் செய்யும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்) (Pope St. John Paul II)
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.
வாழ்க்கைக் குறிப்பு :
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929ல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். ஜெர்மனிய நாசிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்வியை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ம் ஆண்டு அக்டோபர் 16ல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.
அருளாளர் பட்டம் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே தொடங்கும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு கால தாமதம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வாட்டிகன் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தாரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வாட்டிகன் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.
2014, ஏப்பிரல் 27ம் நாள் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களால், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பேராயர் அந்தோனி மரிய கிளாரெட் Antonius Maria Claret 
இவர் தனது 28 ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பல ஆண்டுகள் கத்லோனியாப் பகுதி (Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார். 1843 ஆம் ஆண்டிலிருந்து முழு நேர மறைப்பணியாளராக பணியாற
்றினார். 1849 ஆம் ஆண்டு கிளரீசியன் (Clarentiner) என்ற துறவற சபையை உருவாக்கினார். 1850-1857 ஆம் ஆண்டுவரை கியூபாவில் (Cuba) ஆர்ச்பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1857 ஆம் ஆண்டு அரசி 2 ஆம் இசபெல்லா (Königin Isabella II) அவர்களின் ஒப்புரவு அருட்சாதன குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார். ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பவந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள விச் (Vich) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
செபம்:
அன்பே உருவான இறைவா! புனித அந்தோனி மரிய கிளாரட் மக்கள் நடுவில் நற்செய்தியை அறிவிப்பதில் அவருக்கு வியப்புக்குரிய அன்பையும், பொறுமையையும் அளித்து திடப்படுத்தினீர். நாங்கள் உமது விருப்பத்தையே அனைத்திலும் தேடவும், சகோதரர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருவதில் ஊக்கமுடன் ஈடுபடவும், அவருடைய வேண்டுதலால் எங்களுக்கு அருள்புரிவீராக
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

படைவீரர் புனிதர் (St.John of Capistrano) 
துருக்கி நாட்டு ஒட்டமான் பேரரசர் 2ம் முகமது அவர்கள், 1453ம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிளை தனது ஆளுகையின்கீழ் கொண்டுவந்தார். இது கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனவே அதற்கு அடுத்த ஆண்டில் அப்போதைய தி
ருத்தந்தை 3ம் கலிஸ்துஸ் அவர்கள், பிரான்சிஸ்கன் துறவியாகிய ஜான் கப்பிஸ்த்ரானோ அவர்களிடம், துருக்கியருக்கு எதிராகச் சிலுவைப்போர் தொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது துறவி ஜானுக்கு வயது எழுபது. இவர் தனது பணிக்கு முதலில் ஜெர்மனியிலும் ஆஸ்ட்ரியாவிலும் ஆதரவு தேடினார். சிறிதளவு ஆதரவே அங்குக் கிடைத்ததால் ஹங்கேரி சென்றார், ஆதரவையும் பெற்றார். போதுமான படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு, 1456ம் ஆண்டு கோடை காலத்தில், அப்போது துருக்கியப் படைகளின் ஆக்ரமிப்பிலிருந்த பெல்கிரேடு நோக்கி, திருச்சிலுவையை ஏந்திக்கொண்டு படையெடுத்தார் எழுபது வயதான துறவி ஜான். இதில் இவர் வெற்றியும் அடைந்தார். ஆயினும், அக்காலத்தில் இராணுவத்தில் நிலவிய சுத்தமற்ற நலவாழ்வுச் சூழல்களால் இவர் கொள்ளைநோயால் தாக்கப்பட்டு அவ்வாண்டு அக்டோபர் 23ம் தேதி இறந்தார். இதனால் ஜான் கப்பிஸ்த்ரானோ, படைவீரர் புனிதர் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இத்தாலியின் அப்ருஸ்ஸோ மாநிலத்தில் கப்பிஸ்த்ரானோவில் பிறந்த(ஜூன்24,1386) ஜான் ஒரு வழக்கறிஞர். இவரை Naples அரசர் லடிஸ்லாவுஸ், 1412ம் ஆண்டில் பெருஜியாவின் ஆளுனராக நியமித்தார். அப்போது பெருஜியாவுக்கும், பக்கத்து ஊருக்கும் இடையே நடந்த சண்டையில் அமைதியின் தூதவராக அனுப்பப்பட்ட ஜான், எதிரிகளால் ஏமாற்றப்பட்டு சிறைவைக்கப்பட்டார். இச்சிறை வாழ்வில் புனித பிரான்சிஸ் கனவில் அறிவுறுத்தியபடி, அங்கிருந்து வெளியே வந்த பின்னர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார் ஜான். கடும் தப வாழ்வை மேற்கொண்ட இவர், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, குரோவேஷியா, போலந்து, நார்வே என ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைப்பணியாற்றினார். இவரது உரைகளைக் கேட்பதற்கு வரும் மக்களுக்கு ஆலயங்களில் இடம் போதாதாம். ஒருமுறை 1,26,000 பேர் கூடியிருந்தார்களாம். புனித பெர்னார்டின் போன்று இவர் இயேசுவின் திருப்பெயரின் பக்தியைப் பரப்பினார். திருத்தந்தையர்களால் பல அரசர்களிடம் இவர் தூதுவராக அனுப்பப்பட்டார். புனித ஜான் கப்பிஸ்த்ரானோ பிரான்சிஸ்கன் சபைச் சீர்திருத்தத்தின் நான்கு பெரிய தூண்களில் ஒருவராக நோக்கப்படுகிறார். இப்புனிதரின் விழா அக்டோபர் 23. இவர், நீதிபதிகள் மற்றும் இராணுவ ஆன்மீக வழிகாட்டிகளுக்குப் பாதுகாவலர்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


புனித சுவக்கின், அன்னம்மாள் (St. Joachim and St. Anna)- அன்னை மரியாவின் பெற்றோர்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் மரபு வழி செய்தியின்படி அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் என்று கூறப்படுகின்றது. 6 ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வண
க்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான். 12 ஆம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1568 ஆம் ஆண்டு புனித 5 ஆம் பயஸ் இவ்விழாவை, திருச்சபை பட்டியலிலிருந்து நீக்கினார். ஆனால் 1584 ஆம் ஆண்டு மீண்டும் உரோமை திருச்சபை புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 

அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர். 
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! உம் திருமகனின் தாயை ஈன்றெடுக்கும் பேற்றை புனித சுவக்கின், அன்னம்மாளுக்கு தந்தீர். இவர்களின் வளர்ப்பால் திருமகனுக்கு தாயானார். அன்னை மரியா. எம் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை, ஆன்ம வாழ்வில் வளர்க்க தேவையான அருள் வரங்களை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நற்செய்தியாளர் லூக்கா Aposle & Evangelist Lucas 
பாதுகாவல்: பொலோனியா நகர், பதுவை நகர், மருத்துவர்கள், ஓவியர்கள், வக்கீல், புத்தகம் வெளியிடுவோர்


இவர் ஒரு புறவின இனத்தைச் சார்ந்தவர். இருப்பினும் திருமுறைக்கு மனந்திரும்பினார். புனித பவுலுடன் சேர்ந்து திருத்தூதுரைப் பயணம் மேற்கொண்டார். புனித பவுலின் போதனைக்கு ஏற்ப நற்செய்தி ஒன்றை எழுதியுள்ளார். பின்னர் திருத்தூதர்பணி என்னும் விவிலிய நூலையும் எழுதியுள்ளார். அதில் பவுல் முதன்முறையாக உரோமையில் தங்கிருந்ததுவரை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டுள்ளார். புனித பவுல் லூக்காவை மருத்துவர் என்று குறிப்பிட்டார். லூக்கா தான் எழுதிய நற்செய்தியில், ஏழை மக்களுக்கு மிக முக்கியத்துவம் தந்துள்ளார்.
செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! ஏழைகள் மீது உமக்குள்ள அன்பின் மறைப்பொருளை தமது மறையுரையாலும், எழுத்தாலும் வெளிப்படுத்த, புனித லூக்காவைத் தேர்ந்தெடுத்தீர். கிறிஸ்துவர்களாகிய நாங்கள் ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டு, உம்மீது அன்புகொண்டு, ஏழைகளை என்றும் ஏற்று வாழ, வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
அசிசி நகர் புனித பிரான்சிஸ், சபைத் தலைவர் St. Francis of Assisi 
இவர் ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதை பொறுப்பேற்ற முறையில் கழித்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை
அனுபவித்தார். பின்னர் ஒருநாள் சான் தமியானோ என்ற ஆலயத்திற்கு சென்றார். அப்போது இடிந்துபோன ஆலயத்திலிருந்த, சிலுவையானது அசிசியாரின் வாழ்வை மாற்றியது. அச்சிலுவையின் குரல் கேட்டு, பிரான்சிஸ் மனம் உடைந்தார். தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை நினைத்துப்பார்த்தார். மிகவும் வேதனையடைந்து அழுதார். தன்னுடைய பழைய வாழ்விலிருந்து விடுபட்டு, புதிய வாழ்வை வாழ முடிவெடுத்தார். தன்னுடைய தந்தையின் செல்வங்களை வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, தொழுநோயாளிகளின் மத்தியில் வாழ்ந்தார். 

தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் தொழுநோயாளர்களை கட்டித் தழுவி அரவணைத்து முத்தமிட்டார். மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். உடுத்துவதற்குக் கூட மாற்றுத் துணியின்றி வாழ்ந்தார். பிச்சை எடுத்து உண்டார். தான் பெற்ற உணவுப் பொருட்களை தன்னுடன் வாழ்ந்த தொழுநோயாளர்களுக்கும் கொடுத்து, அவர்களின் அன்பைப் பெற்றார். இவற்றைக் கண்ட பிரான்சிஸின் தந்தை மனமுடைந்து அழுது, பிரான்சிசை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் பிரான்சிசோ அதனை வெறுத்தார். இறைவனை விடாப்பிடியாக பற்றிக்கொண்டார். இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். தான் கண்ட ஏழை மக்களிலும், கடவுளின் ஒவ்வொரு படைக்களிலும் இறைவனைக் கண்டார். படைப்புகள் அனைத்தையும் சகோதர, சகோதரியாகக் கொண்டார். 

தான் கண்ட அனைத்திலும் இறைவனை இறுகப் பற்றினார். கடினமான ஏழ்மையை தழுவி, நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தார். அனைவருக்கும் இறைவனின் அன்பை போதித்தார். இவரின் வாழ்வால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டு, இவரை தொடர்ந்தார்கள். இவர்களை கொண்டு ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் துறவற சபையைத் தொடங்கினார். தன்னை பின்பற்றியவர்களுக்கு சிறந்த ஒழுங்கைக் கொடுத்து, இறைவனைப் பின்பற்ற செய்தார். பின்னர் திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று, அவ்வொழுக்கங்குகளை தன் சபையில் நிரந்தரமாக்கினார். இவர் இறைவன் மேல் கொண்ட அன்பாலும், பக்தியாலும் அல்வேர்னா என்றழைக்கப்பட்ட மலையில் இயேசுவின் 5 காய வரம் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளின் வழியாகத் தான் "மறு கிறிஸ்து" என்றே அழைக்கப்பட்டார். 

இவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏராளமானோர் வந்து சேர்ந்தனர். இச்சபை உலகம் முழுவதிலும் பரவியது. துறவிகள் அல்லாத, பொதுமக்களுக்கென்றும், இவர் 3 ஆம் சபையை தோற்றுவித்தார். இவர் மனந்திரும்பிய நாளிலிருந்து, இறக்கும்வரை கடுந்துயருற்றார். ஆனால் சிறிதளவும் சோர்வடையாமல் இருந்தார். "என் உடலில் உள்ள தழும்புகள், நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று, இவர் தன்னுடன் வாழ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அடிக்கடி கூறி, எப்போதும் இயேசுவின் ஊழியனாகவே வாழ்ந்து இறந்தார். 
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
அந்தியோக்கியா நகர் ஆயர் இக்னேசியஸ் St. Ignatius of Antioch 
இக்னேசியஸ் திருத்தூதர் ஜானின் மாணவர். அந்தியோக்கிய நகரின் மூன்றாவது ஆயர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை என்றழைக்கப்பட்டார். காட்டு மிருகங்களால் கடித்துக் கொல்லப்பட்ட மறைசாட்சியர்களைப் பற
்றி கடிதங்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிகால திருச்சபையின் இறையியலாளர் என்று அழைக்கப்பட்டார். திருச்சபையில் ஆயர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதைப் பற்றியும் திவ்விய நற்கருணையைப்பற்றியும் முக்கிய கடிதங்களை எழுதியுள்ளார். இவர் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்றார். 

இவர் கிறிஸ்துவத்தை பரப்ப அரும்பாடுபட்டார். இதனால் தற்போது உரோம் நகரில் உள்ள கொலோசேயத்தில் (Kolosseum) சிறைபிடித்து வைக்கப்பட்டு பல கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டு மறைசாட்சியாக கிறிஸ்துவின் பொருட்டு தன் உயிரை ஈந்தார். 
செபம்:
அன்பு தந்தையே எம் இறைவா! உம் பொருட்டு தன் உயிரை ஈந்து, உம்மை இவ்வுலகில் பறைசாற்ற பாடுபட்ட ஆயரான அந்தியோக்கிய நகர் இக்னேசியஸை எமக்கு நீர் பரிசாக தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரின் வேண்டுதலால் இன்னும் சிறப்பாக உம் திருச்சபையை வளர்த்தெடுத்து நீர் அருள்புரிய வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
லிசியே நகரின் புனித தெரேசா - (St. Thérèse of Lisieux)
பிறப்பு : ஜனவரி 2, 1873, அலேசான், ஃபிரான்சு
இறப்பு : செப்டம்பர் 30, 1897 (அகவை 24) லிசியே, ஃபிரான்சு
அருளாளர் பட்டம் : 29 ஏப்ரல் 1923 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
புனிதர் பட்டம் : 17 மே 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
லிசியே நகரின் தெரேசா, ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்.
'மரி ஃப்ரான்காய்ஸ் தெரேஸ் மார்ட்டின்' (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், துறவற சபையில் குழந்தை இயேசு, மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888ல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர், (sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர், தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ம் அகவையில் இறையடி எய்தினார்.
இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.
குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது.
தெரேசா ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்'னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.
இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.
பிறப்பு :
தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873ம் ஆண்டு சனவரி திங்கள் 2ம் நாள் லூயிஸ் - செலின் தம்பதியரின் 9வது குழந்தையாக பிறந்தார்.
தனது சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று, 1888ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.
சிறு வழியைக் கண்டுபிடித்தல் :
தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894இல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.
படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது:
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது.”
என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.
அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது:
இதோ அப்பகுதி :
“ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.”
கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.
இதையே அவர் "சிறு வழி" (little way; பிரஞ்சு மூலத்தில் petite voie) என்று அழைத்தார். 1895 ஃபெப்ரவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" (toute petite) என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.
தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.
"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்துவிடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்த பிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்புசெய்வதில் குறைபடுவதில்லை."
தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு :
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985ல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986ல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறு என வெளியிடப்பட்டது.
இறப்பு :
தெரசா இறக்கும் தருவாயில் இருந்த போதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை.அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30ம் நாள் தம் 24ம் அகவையில் இறையடி எய்தினார்.
திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் இவருக்கு முத்திப்பேறு பட்டம் 1923ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ம் நாள் வழங்கப்பட்டது. புனிதர் பட்டம் 1925ம் ஆண்டு மே திங்கள் 17ம் நாள் வழங்கப்பட்டது.
1927ல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக பிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944ல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக ஜோன் ஆஃப் ஆர்கோடு அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997ல் இரண்டாம் யோவான் பவுல் இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33ம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புகழுக்கு அஞ்சி அடிக்கடி இடத்தை மாற்றியவர்(St. Hilarion) 
ஹிலாரியோன் என்ற பாலஸ்தீனச் சிறுவனின் பெற்றோர் தங்களின் மகனைக் கல்வியில் சிறந்தவனாக்க விரும்பி, அக்காலத்தில் கல்விக்குச் சிறந்து விளங்கிய எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவுக்கு அவனை அனுப்பினர். 
அங்குச் சென்ற ஹிலாரியோனுக்கு அந்நகரின் திரையரங்குகளும், கேளிக்கை விளையாட்டுகளும், ஆடம்பரமான நண்பர்களும் கவர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அந்நகரின் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறை அச்சிறுவனை ஈர்த்தது. அச்சமயத்தில் எகிப்தியப் பாலைநிலத்தில் கடும் தவ வாழ்க்கை வாழ்ந்த தூய அந்தோணியார் பற்றி எல்லாரும் வியந்து பேசுவதைக் கேட்டார் இச்சிறுவன். எனவே அவருடன் வாழ முடிவெடுத்து பாலைநிலம் சென்றார் ஹிலாரியோன். அப்போது ஹிலாரியோனுக்கு வயது பதினைந்து. அந்தோணியாரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்ததால், அவருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த பின்னர் தனது சொந்த ஊரான Thabathaவுக்குத் திரும்பினார் ஹிலாரியோன். இவரிடம் ஒரேயொரு மயிராடையும், அந்தோணியார் கொடுத்த தோலாலான ஒரு மேலங்கியுமே இருந்தன. ஊரில் பெற்றோர் இறந்திருந்ததைக் கண்டு தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, காசாவுக்கு அருகிலுள்ள Majuma பாலைவனம் சென்றார் இவர். ஒரு பக்கம் கடலையும், மறுபக்கம் சதுப்பு நிலத்தையும் கொண்ட அவ்விடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் நிறைந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் அவரை எச்சரித்தனர். ஆயினும் அங்கு குச்சிகளால் ஒரு சிறு குடிசை அமைத்து அந்தோணியார்போல் கடும் தவ வாழ்வு வாழத் தொடங்கினார் ஹிலாரியோன். தினமும் கதிரவன் மறைந்த பின்னர் 15 காய்ந்த அத்திப்பழங்களை மட்டுமே சாப்பிட்டார். சாத்தானின் பிடியிலிருந்து பலரை விடுவித்தார். மேலும் பல புதுமைகளையும் செய்தார். மக்களும் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை நாடி மீண்டும் எகிப்து சென்றார்(கி.பி. 360). அங்கு அந்தோணியார் வாழ்ந்த இடங்களைத் தரிசித்தார். பின்னர் அலெக்சாந்திரியாவுக்கு அருகிலுள்ள Bruchium சென்றார். ஆனால் ஜூலியன் என்பவர், கிறிஸ்தவத்துக்கு எதிராகக் கிளம்பி இவரைக் கைது செய்ய முயற்சித்தான். இதனால் லிபியப் பாலைநிலம் சென்றார். பின்னர் சிசிலி சென்று, Pachinumக்கு அருகில் நீண்ட காலம் கடும் தவ வாழ்வு வாழ்ந்தார். இதற்கிடையே, இவரின் முந்தைய சீடரான Hesychius, இவரைத் தேடி அங்கு வந்தார். துறவி ஹிலாரியோன் அவர்களைத் தேடி மீண்டும் மக்கள் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை நாடி குரோவேஷியா நாட்டின் Dalmatiaவிலுள்ள Epidaurus சென்றார். இறுதியில் சைப்ரஸ் தீவு சென்று தனிமையான குகை ஒன்றில் வாழ்ந்து கி.பி.371ம் ஆண்டில் இறந்தார் ஹிலாரியோன். இத்தூயவரின் விழா அக்டோபர் 21. Thabathaல் கி.பி.291ம் ஆண்டில் பிறந்து வளர்ந்த இவரின் வாழ்க்கைக் குறிப்புக்களை தூய ஜெரோம் அவர்கள் எழுதி வைத்துள்ளார்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித பதுவை அந்தோணியார்(St. Antony of Padua) - மறைவல்லுநர்(Priest, Doctor of the Church)
இவர் திருமுழுக்கு பெயர் பெர்டினாண்ட். இவர் கப்புச்சின் சபையில் சேர்ந்தபோது இவருக்கு முன்னோடியாக விளங்கிய வனத்து அந்தோணியார் பெயராக தமது பெயரை மாற்றிக்கொண்டார். பிர
பு குலத்தில் தோன்றிய இவர் 15 வயதில் அகஸ்டினியன் துறவியானார். 8 ஆண்டுகள் கொயிம்பராவில் தவ முயற்சிகளிலும் வேதக்கல்வி கற்றுக்கொள்வதிலும் செலவழித்தார். 1220 ஆம் ஆண்டில் மொரோக்கோவில் கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்ததை புனிதர் பார்த்தார். பார்த்தபிறகு அவருக்குள் தாமும் போய் இயேசுவுக்க்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே, தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். இதனால் 1221 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 

மொரோக்கோவுக்கு புறப்பட தம்மை தயாரித்து கொண்டார். புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். ஆனால் அதற்கு மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய் சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அப்போது போர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிகழவிருந்தது. அப்போது விழாவில் மறையுரை ஆற்ற ஒப்புகொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் மறையுரை ஆற்றும்படி நம் புனிதரை கேட்டுக்கொண்டனர். ஆனால் தன்னம்பிக்கையில்லாமலே அதற்கு ஒப்புக்கொண்டார், அவர் பேசத் தொடங்கியதும் அவரது திறமை, ஆழமான மறை நூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் இவை அனைத்தையும் கேட்டவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இதை நேரில் பார்த்த சபைத் தலைவர், லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப் பொறுப்பை அவரிடம் அளித்தார். அப்போது மறைக்கல்வியும் துறவிகளுக்கு அவர் கற்றுக்கொடுக்க வேண்டியதாயிற்று. பாவிகள் நூற்றுக்கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள், ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர்கள், அவரை அணுகிய வண்ணம் இருந்தனர். இதனால் புனித அசிசியாரின் இறப்பிற்குப்பின் அந்தோணியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அதுமுதல் இறுதிநாள் வரை பதுவையிலேயே அவர் தங்கினார். 1231 ஆம் ஆண்டு ஒரு காட்டுப்பகுதியில் தங்கி மறையுரை ஆற்றி வந்தார். அப்போது அவர் முற்றிலும் உடல் வலிமையிழந்து, சக்தியற்று காணப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு பதுவை நகருக்கு எடுத்து செல்லப்படும் வழியில் இறைவனடி சேர்ந்தார். தம் இறுதிநாட்களை இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் செலவழித்ததாலும், இவரின் கல்லறையானது இங்கே இருப்பதாலும், இவர் பதுவை அந்தோணியார் என்று அழைக்கப்படுகின்றார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூறுவதற்கு முக்கிய காரணம், இவர் ஏழைகளின் மேல் அளவற்ற அன்பும், இரக்கமும் கொண்டிருந்தார். இவர் பெயரால் இன்றும் ஏழைகளுக்கு பதுவை நகரில் உதவி செய்யப்படுகின்றது. இவர் இயேசுவின் மேல் கொண்ட அன்பால், குழந்தை இயேசுவே இவர் கைகளில் வந்து விளையாடியதாக கூறப்படுகின்றது. காணாமல் போன பொருட்களை கண்டுபிடிப்பதில் இவர் வல்லவர். இதனால் இன்றும் பல புதுமைகள் நடந்துக்கொண்டிருந்தது. 
செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! மறைபரப்புப் பணியில் வல்லவராக திகழ்ந்து, ஏழைகளின் நண்பராக வாழ்ந்தார். புனித அந்தோனியார். நாங்களும் எம் சமுதாயத்தில் ஏழைகளை இனங்கண்டு, அன்பு செய்து, எங்களிடம் உள்ளதை பகிர்ந்து வாழ உம் அருள் தாரும். ஆமென்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney – மறைப்பணியாளர்
மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார்.
இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார்.
செபம்:
அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புனித இருபத்திமூன்றாம் யோவான் ( Pope St. John XXIII )
இயற்பெயர் : ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி (Angelo Giuseppe Roncalli)
பிறப்பு : நவம்பர் 25, 1881 சோத்தோ இல் மோந்தே, பெர்கமோ, இத்தாலிய அரசு
(Sotto il Monte, Bergamo, Kingdom of Italy)
இறப்பு : ஜூன் 3, 1963 (அகவை 81) அப்போஸ்தல மாளிகை, வத்திக்கான் நகரம்
(Apostolic Palace, Vatican City)
குறிக்கோளுரை : கீழ்ப்படிதலும் அமைதியும் (Obedience and Peace)
முக்திப்பேறு : 3 செப்டம்பர் 2000 திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
புனிதர் பட்டம் : 27 ஏப்ரல் 2014 புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் திருத்தந்தை ஃபிரான்சிஸ்
திருத்தந்தை புனித இருபத்திமூன்றாம் யோவான் அல்லது இருபத்திமூன்றாம் அருளப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 261ம் திருத்தந்தையாக 1958-1963 காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர்.
இவர் 1881ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் நாள் பிறந்தார். 1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அக்குறுகிய ஆட்சிக்காலத்தில் இவர் 20ம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் நாள் இறந்தார்.
இளமைப் பருவம் :
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, (Angelo Giuseppe Roncalli) இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொம்பார்டி மாநிலத்தில் பெர்கமோ என்னும் பகுதியைச் சார்ந்த சோத்தோ இல் மோன்ட்டே (Sotto il Monte) என்னும் சிற்றூரில் பிறந்தார்.
அவருடைய தந்தை, ஜோவான்னி பத்தீஸ்தா ரொங்கால்லி (1854-1935), தாயார் மரியான்னா ஜூலியா (1854-1939).
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்களைப் போலவே அவரது குடும்பத்தினரும் குத்தகை நிலத்தில் வேலை செய்தனர்.
சிறுவயதிலேயே குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்ட ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, தம் உறவினர் ஒருவர் அளித்த நிதி உதவியோடு பெர்கமோ சிறு குருமடத்தில் கல்வி பயின்றார். கல்வி உதவித்தொகை பெற்று ரோமில் புனித அப்போல்லினார் குருமடத்தில் (இன்றைய "ரோம் திருத்தந்தை பெரிய குருமடம்") கல்வி கற்றார். இறையியல் படிப்பை முடித்து, 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் நாள் குருப்பட்டம் பெற்றார். ரோம் நகரில் "மோன்ட்டே சாந்தோ அன்னை மரியாள்" கோவிலில் குருப்பட்டம் நிகழ்ந்தது.
ரொங்கால்லி, சிறுவயதிலிருந்தே அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மிலான் மறை மாவட்டத்தைச் சேர்ந்த இம்பெர்சாகோ என்னும் ஊரில் அமைந்திருந்த அன்னை மரியாள் திருத்தலத்துக்கு அவர் பல முறை திருப்பயணமாகச் சென்றுவந்தார்.
1901ம் ஆண்டு லொம்பார்டி இராணுவத்தில், கட்டாய இராணுவ சேவை செய்தார்.
திருச்சபையில் பணிபுரிதல் :
பெர்கமோ மறைமாவட்டத்தின் ஆயர் ஜாக்கொமோ ரதீனி-தெதேஸ்கி என்பவர் தம் செயலராக ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லியை 1905ல் நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும் திறமையோடும் ஆற்றினார். 1914, ஆகஸ்ட் 22ம் நாள் ஆயர் ரதீன் தெதேஸ்கி இறந்தார். அதுவரையிலும் ரொங்கால்லி தம் ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.
1921ம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் ரொங்கால்லிக்கு "மொன்சிஞ்ஞோர்" பட்டம் கொடுத்து, அவரை இத்தாலியின் நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி, திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்.
புனிதர் பட்டம் அளிக்கப்படுதல் :
திருத்தந்தை ஃபிரான்சிஸ் 2014, ஏப்ரல் 27ம் நாள் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு "புனிதர்" பட்டம் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கலந்துகொண்டார்.
திருச்சபையின் 2000 ஆண்டு வரலாற்றில் இரண்டு திருத்தந்தையர் ஒரே நேரத்தில் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றியது இதுவே முதல் தடவை ஆகும்.
புனிதர் பட்டம் வழங்கிய சடங்கில் சுமார் 800,000 பேர் கலந்துகொண்டனர். அநேகர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பிறந்த நாடாகிய போலந்திலிருந்து திருப்பயணிகளாக வந்திருந்தனர். வத்திக்கானின் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. அங்கிருந்து டைபர் நதியின் பாலங்களுக்கு அப்பால் கூட மக்கள் கூடியிருந்தனர். பலர் மிகப்பெரிய திரைகளில் நிகழ்ச்சியைக் காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இருபத்திமூன்றாம் யோவான் 1958இலிருந்து 1963 வரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகப் பணியாற்றினார். அவர்தான் 1962ல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்றொரு உலகளாவிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அவருடைய ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு வழிகோலிற்று.
இருபத்திமூன்றாம் யோவான் உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார். அமைதி பற்றி அவர் எழுதிய "அவனியில் அமைதி" (Pacem in Terris) என்ற சுற்றுமடல் பன்னாட்டு சமூகத்தில் ஆழ்ந்த தாக்கம் கொணர்ந்தது. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய "பனிப்போர்" 1963ல் அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் பேராபத்து எழுந்தபோது, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் அமெரிக்க அதிபர் ஜாண் எஃப். கென்னடியையும் அந்நாளைய சோவியத் யூனியனின் அதிபர் குருஷேவையும் தொடர்புகொண்டு போர் எண்ணங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2000ம் ஆண்டில் முக்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெறுவதற்குக் குறிக்கப்பட்டவர் இரு புதுமைகளை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பது ஒழுங்குமுறை. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானை நோக்கி வேண்டிக்கொண்டதால் அதிசயமான விதத்தில் ஒருவர் குணமார் என்பதை வத்திக்கான் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆயினும் புனிதர் பட்டம் கொடுப்பதற்கு மேலும் இரண்டாவது ஒரு புதுமை தேவைப்பட்டது.
நிலைமை இவ்வாறிருக்க, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு புனிதர் பட்டம் அளிக்க இரண்டாவது புதுமை தேவையில்லை என திருத்தந்தை ஃபிரான்சிஸ் தீர்மானித்து, சட்டத்திற்கு விதிவிலக்கு அளித்தார்.

No comments: